தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை சாதாரணமாகிவிட்டது: அண்ணாமலை

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சாதாரணமாகிவிட்டது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

கிளாம்பாக்கத்தில் உள்ள பேருந்து நிலையத்திற்கு வெளியே 18 வயது இளம்பெண் ஆட்டோவில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். உதவி கேட்டு அலறிய அப்பெண்ணின் அலறல் சப்தத்தை கேட்டு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அந்தப் பெண் காப்பற்றப்பட்டார். தமிழகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சாதாரணமாகிவிட்டது. போதைப் பொருள் என்பது எளிதில் கிடைக்கக்கூடிய பொருளாக மாறிவிட்டது. குறைவான அளவில் போதைப் பொருள் தொடர்பான கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதன் மூலமாக, போதைப் பொருள் கடத்தல்காரர்களை தமிழ்நாடு அரசு பாதுகாக்கிறதா?

போதைப் பொருள் தடுப்பு வழக்கில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஒரே ஆண்டில் 9,632 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால். 2022 முதல் 2224 ஆம் ஆண்டு வரை போதைப் பொருள் வழக்கில் 1, 222 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கஞ்சா, மெத்தபெட்டமைன் போதைப் பொருள் அதிகரித்துள்ள நிலையில், கைது நடவடிக்கை குறைந்தது எப்படி? போதைப் பொருள் கடத்தல்காரர்கள் சுதந்திரமாக சுற்றித் திரிவதற்கு அரசு வழிவகை செய்து வருகிறது. போதைப் பொருள் விற்பனை அதிகரித்துள்ளதால் தான் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பாதுகாப்பை உறுதி செய்வதற்குள் இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்படுவார்களோ. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.