மரங்களை வெட்டி வீழ்த்துவதை உடனடியாக தமிழ்நாடு அரசு நிறுத்த வேண்டும்: சீமான்!

வடலூர் வள்ளலார் பெருவெளியில் உள்ள மரங்களை வெட்டி வீழ்த்துவதை தமிழ்நாடு அரசு உடனடியாக
கைவிட வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளதாவது:-

வடலூர் வள்ளலார் பெருவெளியில் பல ஆண்டுகளாக வளர்த்தெடுக்கப்பட்ட மரங்கள் திடிரென தற்போது தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறையால் வெட்டி அகற்றப்பட்டு வருவது வன்மையான கண்டனத்துக்குரியது.

அதைவிடுத்து, தைப்பூச திருவிழாவிற்கான தூய்மைப்பணி என்ற பெயரில் மரங்களை வெட்டி வீழ்த்துவது வாடியப் பயிரை கண்டு வாடிய வள்ளல் பெருமானாரின் உயிர்ம நேய கொள்கைக்கே முற்றிலும் எதிரானது. இத்தனை ஆண்டுகளாக இடையூறாக இல்லாத மரங்கள் இப்போது மட்டும் இடையூறாக இருக்குமென்று தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறை காரணம் கூறுவது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.

தமிழர் மெய்யியல் புரட்சி கண்ட வள்ளலார் வழியை பின்பற்றும் மெய்யன்பர்கள், தைப்பூச திருவிழாவின்போது உண்மையிலேயே எவ்வித இடையூறும் இன்றி வழிபாடு மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசு நினைத்தால் வள்ளலார் பெருவெளியை ஆய்வரங்கம் உள்ளிட்ட எதன் பெயரிலும் ஆக்ரமிப்பு செய்யாமல் அப்படியே பராமரிப்பதே பேருதவியாகும்.

ஆகவே, வடலூர் வள்ளலார் பெருவெளியில் மெய்யன்பர்கள் இளைப்பாற பெருநிழல்தரும் பல்லாண்டுகள் பழமையான மரங்களை வெட்டி வீழ்த்துவதை உடனடியாக தமிழ்நாடு அரசு நிறுத்த வேண்டுமென வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.