முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தவாக தலைவர் வேல்முருகன் சந்திப்பு!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் எம்.எல்.ஏ. இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது தமது தொகுதி பிரச்சனைகளில் அரசு அதிகாரிகள் செயல்பாடுகள், ஈழத் தமிழர்களின் மீதான அத்துமீறிய நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் விரிவாகப் பேசியதாக தவாக தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் வேல்முருகன் கூறியதாவது:-

என் தொகுதியில் மூடப்பட்ட தொழிற்சாலைகளின் நிலங்கள், அரசு வசம் உள்ள பஞ்சமி நிலங்களை வர்த்தக நோக்கத்துக்காக பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது; அந்த நிலங்களை மீட்டு வேளாண் கல்லூரி, பொறியியல் கல்லூரி அமைக்க வேண்டும் என முதல்வரிடம் வேண்டுகோள் வைத்தேன். மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் உதவியாளர் பிரசாத் என்பவர் கைது செய்யப்பட்டதாக நேற்று செய்திகள் வெளியாகி இருந்தன. அது உண்மை அல்ல. பிரசாத் கைது செய்யப்படவில்லை.

தமிழ்நாட்டில் ஈழத் தமிழருக்காக அரசியல் ரீதியாக லாபி செய்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகளின் நெருக்கடியால் இத்தகைய கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான மத்திய அரசின் தடையை நீடிக்க வேண்டும் என்பதற்காக இத்தகைய நடவடிக்கைகள் மத்திய அரசின் அழுத்தத்தால் மேற்கொள்ளப்படுகின்றன. இத்தகைய கைது நடவடிக்கைகள் குறித்தும் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பாக முதல்வர் ஸ்டாலினிடம் பேசினேன். கைது செய்யப்பட்ட ஈழத் தமிழரை மத்திய அரசு அல்லது இலங்கை அரசிடம் ஒப்படைக்கக் கூடாது; சிறப்பு முகாம்களில் அடைக்கக் கூடாது என்றும் முதல்வரிடம் வலியுறுத்தினேன். கடந்த காலங்களிலும் இதேபோல நடவடிக்கை எடுக்கப்பட்ட போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடம் வலியுறுத்தி கைவிடச் செய்தேன் என்பதையும் முதல்வரிடம் சுட்டிக்காட்டினேன்.

திருப்பரங்குன்றத்தில் இருதரப்பு மக்களது வழிபாட்டு உரிமையையும் மதித்து அனைவரும் நடக்க வேண்டும்; ஒரு தரப்புக்கு மட்டும் உரிமையை தந்துவிட்டு மற்றொரு தரப்புக்கு உரிமையை மறுக்கக் கூடாது என்பது எங்களது நிலைப்பாடு. வன்னியர் சமூகத்தின் 21 இடஒதுக்கீடு போராளிகளுக்கும் கோவிந்தசாமிக்கும் மண்டபங்கள் கட்டியதற்காக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தேன். மேலும் தமிழ்ச் சமூகத்தின் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விரிவாக பேசவும் நேரம் கேட்டுள்ளேன். இவ்வாறு வேல்முருகன் கூறினார்.

திமுக கூட்டணியில்தான் வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சி இடம் பெற்றுள்ளது; ஆனால் திமுக ஆட்சி மீது அண்மையில் அதிருப்தியை வெளியிட்டு வந்தார் வேல்முருகன். தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யக் கூடும் வேல்முருகன் என்கிற அளவுக்கு செய்திகள் வெளியாகி இருந்த நிலையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினை வேல்முருகன் சந்தித்து பேசியிருக்கிறார்.