அங்கன்வாடி மையங்களில் காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்: டி.டி.வி. தினகரன்!

அங்கன்வாடி மையங்களில் 27 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில் மழலை குழந்தைகளின் அடிப்படை கல்வியை கூட முறையாக வழங்க திமுக அரசு மறுப்பது கண்டனத்துக்குரியது என டிடிவி தினகரன் கூறி உள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள அங்கன்வாடி மையங்களில் ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளது. அவற்றை முந்தைய அதிமுக அரசு நிரப்பினாலும், திமுக ஆட்சியில் காலி பணியிடங்கள் நிரப்பபடவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இந்த நிலையில் அங்கன்வாடி மையங்களில் காலி பணியிடங்களை விரைவாக திமுக அரசு நிரப்ப மறுப்பது கண்டனத்துக்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது அறிக்கையில் கூறி உள்ளார்.

இதுதொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தமிழகம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களில் 27 ஆயிரம் காலிப்பணியிடங்கள் – மழலைக் குழந்தைகளின் அடிப்படைக் கல்வியை கூட முறையாக வழங்க மறுக்கும் திமுக அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 55 ஆயிரம் அங்கன்வாடி மையங்களில் 27 ஆயிரம் ஆசிரியர் மற்றும் சமையலர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. மழலைக் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவு மற்றும் அடிப்படைக் கல்வியை வழங்கும் நோக்கத்தில் இயங்கி வரும் அங்கன்வாடி மையங்களில் போதுமான ஆசிரியர்கள் மற்றும் சமையலர்களை நியமிக்க திமுக அரசு காட்டும் மெத்தனப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

பல்லாயிரக்கணக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி தொடர் போராட்டங்களை முன்னெடுத்த போதிலும் கண்டுகொள்ளாத திமுக அரசால், தற்போது ஒரே ஆசிரியர் இரண்டு அல்லது மூன்று அங்கன்வாடி மையங்களை கவனிக்கும் அளவிற்கு பணிச்சுமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆசிரியர் இல்லாத அங்கன்வாடி மையங்களில் பணியாற்றும் சமையலரே குழந்தைகளையும் பார்த்துக் கொள்ள வேண்டிய சூழல் நிலவுவதால் அவர்களுக்கான ஊட்டச்சத்து உணவை உரிய நேரத்தில் வழங்க முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது.

எனவே, அங்கன்வாடி மையங்களில் நிலவும் ஆசிரியர் மற்றும் சமையலர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்புவதோடு, மழலைக் குழந்தைகளுக்கு தேவையான அடிப்படைக் கல்வி மற்றும் ஊட்டச்சத்து உணவு முறையாக வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு டிடிவி தினகரன் கூறியுள்ளார்.