இந்தியர்களின் கைகளிலும் கால்களிலும் விலங்கு: அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கண்டனம்!

இந்தியர்களின் கைகளிலும் கால்களிலும் விலங்கு போட்டு, மிருகங்களைப் போல கொண்டுவந்து தூக்கிவீசுவதை சகித்துக் கொள்ள முடியவில்லை என அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறியுள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

டீபோர்ட் செய்யப்பட்டவர்கள் என்ன தீவிரவாதிகளா? கொலைபாதகர்களா? அவர்கள் எல்லாருமே குஜராத், ராஜஸ்தான், ஹரியாணாவைச் சேர்ந்தவர்கள். ஆனாலும், இந்தியர்கள் என்ற உணர்வோடு நமக்கு ரத்தம் கொதிக்கிறது.

ஏதோ ஒரு நம்பிக்கையில், இனியாவது நிம்மதியாக வாழலாம் என்ற எதிர்பார்ப்பில் நாட்டை விட்டு பிழைப்பு தேடி அமெரிக்கா சென்றவர்கள். இன்னமும் இவர்கள் இந்தியர்கள்தானே? இன்னொரு மாநிலத்தைச் சேர்ந்த நம் சகோதரர்கள்தானே!

இவர்களுக்கு கைகளிலும் கால்களிலும் விலங்கு போட்டு, மிருகங்களைப் போல கொண்டுவந்து தூக்கிவீசுவதை சக இந்தியனாக நம்மாலேயே சகித்துக் கொள்ள முடியவில்லையே! எங்கோ யாருக்கோ நடந்தது போல வேடிக்கை பார்க்க மத்திய அரசுக்கு எப்படி மனம் வருகிறது?

அடிப்படை மனித உரிமைகள்கூட அவர்களுக்கு கிடையாதா!? ஒரு கண்டனம்.. கொஞ்சம் எதிர்ப்பு.. அவர்களுக்கு பெரும் ஆறுதலை தருமே! அதுகூடவா முடியாது? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.