அரசு கலைக் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றி வரும் சுமார் 7,300 கவுரவ விரிவுரையாளர்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ந்து அறவழியில் போராடி வருகின்றனர். உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின்படியும், பல்கலைக்கழக மானியக் குழு வழங்கியுள்ள பரிந்துரையின்படியும் தங்களைப் பணிநிரந்தரம் செய்ய வேண்டுமென்றும், அதுவரை மாதம் ரூ. 50,000 ஊதியம் வழங்க வேண்டுமென்றும் கோரி வருகின்றனர்.
மிகக் குறைந்த தொகுப்பூதியத்தில் நெடுங்காலமாகப் பணியாற்றி வரும் அவர்கள், பணிநிரந்தரம் பெற்ற பேராசிரியர்களைப் போலவே பணியாற்றுகின்றனர். ஆனால், பேராசிரியர்களுக்கு வழங்கப்படுவதைப் போல ஊதியம் மற்றும் அரசின் இதர உதவிகள் இவர்களுக்கு வழங்கப்படவில்லை. எனவே, அவர்களோடு உரிய முறைப்படி பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கைகளைப் பரிசீலித்து அவற்றை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.