கோவை பட்டீஸ்வரர் கோயில் குடமுழுக்கை தமிழ் மொழியில் நடத்துவதை தமிழ்நாடு அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று வேல்முருகன் கூறியுள்ளார்.
இதுகுறித்து தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறியுள்ளதாவது:-
கோவை மாவட்டம் பேரூரில் அமைந்துள்ள பட்டீசுவரர் கோயில் சைவ சமய கோயிலாகும். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற இக்கோயில் நொய்யல் ஆற்றை ஒட்டி அமைந்துள்ளது. இக்கோயில் தமிழ் மன்னனான கரிகால சோழனால், 2ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. மேலும், இக்கோயிலின் சிறப்பை, அருணகிரிநாதர், கச்சியப்ப முனிவர் போன்ற தமிழர் புலவர்களால் பாடப்பெற்றதாகும். இவை தவிர, சுந்தரர் இக்கோயிலுக்கு வருகை புரிந்து தேவாரப் பாடல்கள் பாடியிருக்கிறார்.
சோழ பேரரசன் முதலாம் இராசராச சோழன் ஆட்சியில் இக்கோயிலில் அர்த்த மண்டபம் மற்றும் மகா மண்டபம் ஆகியவை கட்டப்பட்டு, கோயிலுக்கு அளிக்கப்பட்ட பல்வேறு நன்கொடைகள் அங்குள்ள சுவர்களில் ஆவணப்படுத்தப்பட்டன. இங்கு சிவபெருமான் பட்டீசுவரர் என்ற பெயருடன் பச்சை நாயகி அம்மன் துணையுடன் அருள்பாலிக்கிறார். தமிழர்களின் சிற்பக்கலைக்கு சான்றாக இத்திருக்கோயிலின் தூண்கள் அமைந்துள்ளன.
இப்படி வரலாற்றுச் சிறப்புமிக்க, பட்டீஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா வரும் 10.02.2025 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், குடமுழுக்கு விழா தாய் மொழியான தமிழ் மொழியில் நடைபெறாது என்றும் மாறாக சமஸ்கிருத்தத்தில் தான் நடைபெறும் என்றும் கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்திருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது. சிவபெருமானுக்கு தமிழ் முன்னோர்களால் கட்டப்பட்ட இக்கோயிலில், தாய் தமிழில் குடமுழுக்கு நடைபெறாது எனக்கூறுவது வெட்கக்கேடானது.
தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து கோயில்களுக்கும் குடமுழுக்கு தமிழ்மொழியில் நடத்த வேண்டும் என்றும் அதனை நிறைவேற்ற தவறும் கோயில் நிர்வாகத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. இதனையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், கோவை மாவட்டம் பட்டீஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா வரும் 10.02.2025 அன்று நடைபெறவுள்ள நிலையில், அதனை தமிழில் நடத்த முடியாது என மாவட்ட நிர்வாகம் கூறுவது, இந்து சமய அறநிலையத்துறையின் மீது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.
தமிழ்நாட்டில் தமிழர் கட்டிய கோயிலில் தமிழ் கடவுளான சிவபெருமானுக்கு தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டி, தமிழர்கள் வீதியில் இறங்கி போராடுவது என்பது அவமானகரமானது. சொந்த மண்ணிலேயே மண்ணின் மக்களை இழிப்படுத்தும் செயலாகும். சமஸ்கிருத்தத்தில் தான் குடமுழுக்கு நடத்தப்படும் என்பது ஒற்றை ஆரியப் பண்பாட்டை தமிழ் மண்ணில் திணிக்கும் சதித்திட்டமே!
அதுமட்டுமின்றி, தமிழ் கடவுளான சிவபெருமானுக்கு சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்துவதே பெரிய அவமானத்துக்குரியது. இது குறிப்பிட்ட மொழி தெரிந்தவனிடம், தெரியாத மொழி பேசினால், எப்படி புரியாதோ, அதுபோல தான். எனவே, பட்டீஸ்வரர் கோயில் கருவறை, கோபுர கலகசம், வேள்விச் சாலை மற்றும் குடமுழுக்கை தமிழ் மந்திரங்கள் ஓதி அர்ச்சனை செய்ய வேண்டும். பிராமணர் அல்லாத தமிழ் அர்ச்சகர்களையும் குடமுழுக்கில் ஈடுபடுத்தி தமிழில் அர்ச்சனை செய்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
கருவறை, கோபுர கலகசம், வேள்விச் சாலை மற்றும் குடமுழுக்கை தமிழ் மந்திரங்கள் ஓதப்படுகிறதா என்பதை கண்காணிக்க, இந்து சமய அறநிலையத்துறை, ஓய்வுபெற்ற நீதிபதிகள், ஓய்வு பெற்ற மாவட்ட ஆட்சியர்கள், தமிழ் ஆன்மீக சான்றோர்கள் உள்ளடக்கிய கண்காணிப்புக்குழுவை அமைக்க வேண்டும்.
முக்கியமாக, கடந்த காலங்களை போன்று, வெறும் கண்துடைப்பிற்காக, தமிழ் ஓதுவார்களை அழைத்து வந்து ஒரு மூலையில் அமர வைத்து, தமிழ் மந்திரங்களை ஓதாமல், கோபுர கலகசம், வேள்விச் சாலை மற்றும் குடமுழுக்கை தமிழ் மந்திரங்கள் ஒலிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுக்கிறது.
தமிழர் ஆன்மீகம் என்பது சனாதானத்திற்கும், வருணாசிரம கோட்பாட்டிற்கும் எதிரானது. தமிழ் மொழி உரிமை, தமிழர் மண்ணுரிமை ஆகியவற்றை பாதுகாத்துக் கொள்ள தமிழினம் நடத்தி வரும் அனைத்து முனைப் போராட்டங்களிலும், அனைத்து வகை முயற்சிகளிலும் தமிழர் ஆன்மிகம் தனது வலுவான பங்கை ஆற்றி வருகிறது என்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி சுட்டிக்காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.