பாலியல் அத்துமீறல் ஈடுபடும் ஆசிரியர்களின் கல்விச்சான்று ரத்து: அமைச்சர் அன்பில் மகேஷ்!

பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் சிக்கும் ஆசிரியர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில், தண்டனை மட்டுமல்லாமல் உடனடியாக அவர்களின் கல்விச் சான்றுகளை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுப்போம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமை வழக்குகள் ஆசிரியர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. 2 நாட்களுக்கு முன்பாக கிருஷ்ணகிரி அருகே போச்சம்பள்ளியில் 8ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டு, போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். அதேபோல் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் படிக்கும் 4ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பள்ளியின் தாளாளர் சுதா மற்றும் அவரின் கணவர் வசந்தகுமார் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இரு சம்பவங்களும் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைது செய்யப்படும் ஆசிரியர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கேள்விக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் அளித்துள்ளார். அதில், பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்து கொண்டிருக்கிறது. அப்படியான சம்பவங்கள் நடக்கக் கூடாது என்பதற்காக தான் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வந்தார். இந்த சம்பவத்தில் உண்மைதன்மை நிரூபிக்கப்படும் பட்சத்தில், யாராக இருந்தாலும், நிச்சயம் தண்டனையுடன் மட்டும் நிறுத்தப்படாது. அவர்களின் கல்வி சான்றுகளை முழுமையாக ரத்து செய்வதற்காக நடவடிக்கைகளை எடுப்போம் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங் அளிக்கப்படுகிறதா என்ற கேள்விக்கு, தலைமையாசிரியர்களுக்கு தலைமை பண்பு தொடர்பாக பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறோம். ஒவ்வொரு தலைமையாசிரியர்களும் அந்தந்த பள்ளிகளில் ஆசிரியர்களை அழைத்து கவுன்சிலிங் மற்றும் அறிவுரை அளிக்கும் பணிகளில் ஈடுபட வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கக் கூடிய மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் உடனடியாக இதுபோன்ற பிரச்சனைகளில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை எற்பட்டு, அது காவல்துறை கைகளுக்கு சென்றுவிட்டால், அவர்கள்தான் இனி நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.