வேலூர் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை!

கோவையில் இருந்து திருப்பதி செல்லும் விரைவு ரயிலில் 4 மாத கர்ப்பிணிப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பெண் கூச்சலிட்ட நிலையில், கர்ப்பிணி என்று கூட பார்க்காமல் அவரை ஓடும் ரயிலில் இருந்து வெளியே தள்ளியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அந்த பெண்ணுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், அதைத் தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும், அதையும் தாண்டி சில மோசமான சம்பவங்கள் நடந்து விடுகின்றன. அப்படியொரு அதிர்ச்சி சம்பவம் தான் இப்போது திருப்பூரில் நடந்துள்ளது. திருப்பூரில் ஓடும் ரயிலில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு பாலியல் தொல்லையை சில கொடூரன்கள் கொடுத்துள்ளனர். இதனால் பெண் கூச்சலிட்ட நிலையில், அவரை ரயிலில் இருந்தே தூக்கி வெளியே வீசியுள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.

கோவையில் இருந்து ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு இன்டர்சிட்டி விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. ஆந்திரா செல்லும் பலரும் இந்த ரயிலைப் பயன்படுத்துவார்கள் என்பதால் எப்போதும் இந்த ரயிலில் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். இந்த ரயிலில் தான் கர்ப்பிணி பெண் பாலியல் தொல்லைக்கு உள்ளாகி இருக்கிறார். சித்தூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கோவையில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். நான்கு மாத கர்ப்பிணியாக இருந்த அந்தப் பெண், இன்டர்சிட்டி ரயில் மூலம் சொந்த ஊருக்குக் கிளம்பியுள்ளார். அவர் பெண்கள் பெட்டியிலேயே ஏறி பயணம் மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அந்த பெட்டியில் ஏறிய சிலர் அவருக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளனர். இதனால் அந்த பெண் கத்தி கூச்சலிட்டுள்ளார். இதனால் அஞ்சி அந்த கும்பல் கே.வி.குப்பம் அருகே ரயில் சென்று கொண்டிருந்த போது, கர்ப்பிணி என்று கூட பார்க்காமல் அந்த பெண்ணை கீழே தள்ளிவிட்டுள்ளனர். கழிவறைக்குச் சென்ற போது, அவர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அப்போது பெண் கூச்சலிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் கர்ப்பிணிப் பெண்ணை அவர்கள் தள்ளிவிட்டுள்ளனர்.

இதைப் பார்த்த சக பயணிகள் சிலர் உடனடியாக கத்தியுள்ளனர். இருப்பினும், அந்த நபர்கள் உடனே வேறு பெட்டிக்குச் சென்றுள்ளனர். மேலும், பயணிகள் சிலர் கே.வி.குப்பம் போலீசாரிடம் இந்தச் சம்பவம் குறித்து தகவல் கொடுத்துள்ளனர். அவர்கள் ஜோலார்பேட்டை ரயில்வே போலீசாருக்கு இது தொடர்பாகத் தெரியப்படுத்திய நிலையில், ரயில் சென்ற பாதையில் ரயில்வே போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது தான் கே.வி.குப்பம் அருகே கர்ப்பிணிப் பெண் தண்டவாளத்திற்கு மிக அருகில் இருந்தது தெரிய வந்தது. அந்த பெண்ணின் கை மற்றும் கால்களில் பலத்த காயம் இருந்துள்ளது. இதையடுத்து அந்த பெண்ணை போலீசார் அடுக்கம்பாளையம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவ சோதனையில் அந்த பெண்ணுக்கு கை, கால் உள்ளிட்ட இரண்டு இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது தெரிய வந்தது. அதற்கான சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள சூழலில், இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது யார்! பெண்கள் பெட்டியில் அவர்கள் ஏறியது ஏன்! வேறு எந்த பெட்டிக்குத் தப்பிச் சென்றனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.