வக்கிர புத்தி உள்ள கயவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!

கர்ப்பிணி பெண் என்று கூட பார்க்காமல் பாலியல் தொல்லை அளித்ததோடு, ரயிலில் இருந்து தள்ளிவிட்ட வக்கிர புத்தி உள்ள கயவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கர்ப்பிணி இளம்பெண் ஒருவர் திருப்பூரில் பணியாற்றி வருகிறார். அவர் தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக நேற்று கோவையில் இருந்து ஜோலார்பேட்டை வழியாக திருப்பதி வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த ரயில் குடியாத்தம் – கேவி குப்பம் இடையில் சென்ற போது, கர்ப்பிணி இளம்பெண் கழிவறைக்கு சென்றிருக்கிறார். அப்போது போதையில் இருந்த சிலர், கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து உடனடியாக அந்தப் பெண் கூச்சலிட, அந்த கர்ப்பிணி பெண்ணை ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளனர். அதன்பின் அங்கிருந்தவர்கள் கர்ப்பிணி பெண்ணை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கை, கால்களில் முறிவு ஏற்பட்ட கர்ப்பிணிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக கேவி குப்பத்தை அடுத்த பூஞ்சோலைக் கிராமத்தைச் சேர்ந்த ஹேமராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர் ஏற்கனவே ரயிலில் பயணித்த போது, ஏராளமான முறை பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கர்ப்பிணியை ரயிலில் இருந்து தள்ளிவிட்ட சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதாவது:-

கோவை – திருப்பதி இடையே சென்றுக்கொண்டிருந்த ரயிலில், கர்ப்பிணி பெண்ணுக்கு இருவர் பாலியல் தொல்லை அளித்ததோடு, அந்த பெண் கூச்சலிட முயற்சி செய்ததால் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டதாக வரும் செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக சாலையில் நடந்து செல்ல முடியவில்லை. பள்ளி, கல்லூரி, பணியிடங்களுக்கு செல்ல முடியவில்லை. தற்போது ரயிலில் கூட பயணிக்க முடியவில்லை என்ற நிலை வந்திருப்பது வெட்கக்கேட்டின் உச்சம். மு.க.ஸ்டாலின் மாடல் திமுக அரசு பெண்களின் பாதுகாப்பில் கடுகளவு கூட கவனம் செலுத்தாததன் நீட்சியே இத்தகைய கொடுமைகள் தொடர்வதாகும்.

கர்ப்பிணி பெண் என்று கூட பாராமல் பாலியல் தொல்லை அளித்துள்ள, வக்கிர புத்தியுடைய கயவர்கள் மீது மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.