சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து விஜய் கேட்பது சரிதான்: வானதி சீனிவாசன்!

சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து விஜய் கேட்பது சரிதான் என்று வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்புக்கான ஆய்வை நடத்தாதது ஏன்? என்று தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில் மத்திய மற்றும் தமிழக ஆட்சியாளர்கள் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கிறார்கள் என்று விமர்சித்துள்ளார்.

இந்நிலையில் கோவை மக்கள் சேவை மையம் சார்பாக சுயம் திட்டத்தின் கீழ் இலவச தையல் பயிற்சி வகுப்பு துவங்கும் விழா கோவை, காந்திபுரம் பகுதியில் நடைபெற்றது. இதை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த வானதி எம்.எல்.ஏ. கூறியதாவது:-

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் சுயம் என்கின்ற திட்டத்தை ஆரம்பித்தோம். இந்த திட்டத்தை முதற்கட்டமாக 1000 பெண்களை தொழில் முனைவோராக மாற்ற வேண்டும் என்பதற்காக, பெண்களுக்கு இலவசமாக தையல் பயிற்சியை கொடுத்து, இலவசமாக தையல் இயந்திரத்தையும் கொடுத்து, அது வெற்றிகரமாக நிறைவுற்றதற்கு பிறகு, மீண்டும் ஆயிரம் பெண்களை தொழில் முனைவோராக மாற்ற வேண்டும் என்பதற்காக, இரண்டாம் கட்டமாக இந்த சுயம் திட்டத்தை இன்று ஆரம்பித்து இருக்கிறோம். கோவை, காந்திபுரம் சித்தாபுதூர் பகுதியில் இந்த நிகழ்வு துவங்கி வைக்கப்பட்டு உள்ளது. பெண்கள் தங்களுடைய குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு, அதே சமயம் சுயமாக அவர்கள் தொழில் செய்து சம்பாதிப்பதற்கு ஏற்றவாறு தையல் தொழில் இருக்கிறது. அதற்கு ஒரு இலவச பயிற்சியை, வீட்டிற்கு அருகாமையில் கற்றுக் கொள்ளும்படி அமைத்துக் கொடுத்து இருக்கிறோம். பாலாம்பாள் தொண்டு நிறுவனத்தோடு இணைந்து இந்த பயிற்சி, மற்றும் இது மத்திய அரசின் சமர்த் திட்டத்தின் பயிற்சி வழங்கப்படுகிறது.

திருப்பூர் ஏற்றுமதியாளர் சமர்த் திட்டத்தின் உடைய ஒதுக்கீட்டினை பெற்று இந்த பகுதி பெண்களுக்காக ஏற்பாடு செய்து கொடுத்து இருக்கிறோம். இந்த பயிற்சியை முடித்த பிறகு இவர்களுக்கும் இலவசமாக தையல் இயந்திரம் வழங்கப்படும். இதன் வாயிலாக கோவை பகுதிகளில் அதிகமான தொழில் முனைவோர்களை உருவாக்க வேண்டும் என்பது எங்களுடைய லட்சியம் என்றார்.

கோவை மாநகராட்சியில், ஊராட்சிகளை இணைக்கும் திட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறித்தான கேள்விக்கு, கோவை மட்டுமல்ல தமிழகம் முழுவதுமே, ஊராட்சிகளை, மாநகராட்சியுடன் இணைப்பதற்கு கடுமையான எதிர்ப்பு இருக்கிறது. ஜனவரி 26 ஆம் தேதி கிராம சபை கூட்டங்கள் அவசரகதியில், மக்களின் கருத்துக்கள் கூட கேட்கப்படாமல் முடித்து வைக்கப்பட்டு உள்ளது. இதற்கான எதிர்ப்புகளை தமிழக முழுவதும் மக்கள் காட்டிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் தமிழக அரசு மக்களின் விருப்பத்திற்கு மாறாக, ஊராட்சிகளை மாநகராட்சியோடு இணைத்து கொண்டு இருக்கிறார்கள். இதனால் அந்த ஊராட்சிகளுக்கு மத்தியில் இருந்து வரக் கூடிய நிதிகள் நிறுத்தப்படும். இன்னும் அந்த பகுதியில் இருக்கிற சாலைகளோ, நீர் நிலைகளோ, பாதுகாக்கப்படுவதில் இருந்து கூட இந்த அரசு தவறி இருக்கிறது. ஏற்கனவே கோவை மாநகராட்சியில் குப்பை எடுப்பதற்கான ஆட்கள் இல்லை. பக்கத்தில் இருக்கும் அனைத்து ஊராட்சிகளையும், மாநகராட்சியோடு இணைத்து கொண்டால், இன்னும் மோசமான நிலையில் இவர்கள் மக்களை கொண்டு சென்று விடுகிறார்கள். ஏற்கனவே நகராட்சி, மாநகராட்சி சிறப்பாக செயல்படுகிறது, அதில் கிடைக்கும் வசதிகள் நமக்கும் கிடைக்கும் என்றால் மக்கள் இவ்வளவு எதிர்ப்பை காட்ட மாட்டார்கள். இங்கேயே இவ்வளவு சிரமம் இருக்கும் பொழுது பக்கத்தில் இருக்கும் ஊராட்சியை இணைத்து நாசம் செய்து விடும் இந்த அரசு அதனால் தான் மக்கள் இவ்வளவு கடும் எதிர்ப்புகளை காட்டுகிறார்கள் என்றார்.

மசோதாக்களை நிறுத்தி வைத்தது தொடர்பாக சுயமாக முடிவெடுத்து இருக்கிறார்கள், என்று உச்ச நீதிமன்றம் ஆளுநரை கண்டித்து இருக்கிறதே என்ற கேள்விக்கு, ஆளுநர் விஷயத்தைப் பொறுத்த வரை நான் பல்வேறு முறை கூறி இருக்கிறேன், அரசியலமைப்பு சட்டப்படி யாருக்கு எவ்வளவு என்ன அதிகாரம் இருக்கிறதோ, அதற்குள் அவர்கள் செயல்படுவதற்கு எந்த விதமான தடையும் இல்லை. ஏனென்றால் இது உள்ளூர பரிமாறப்படும் விஷயங்கள், வெளியில் இருப்பவர்களுக்கு தெரியாது என்றார்.

கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் ரகசிய கேமரா வைத்தது யார் என்ற கேள்வி எழுந்து உள்ளது, என்ற கேள்விக்கு பதில் அளித்தவர், இந்த ஆட்சியில் தான் சார் யார்?, யார் அந்த சாரு?, யார் அந்த கார்?, இப்பொழுது அடுத்ததாக எதுக்கு அந்த கேமரா?, யாரு வச்சாங்க கேமரா?, இவை அனைத்துமே விடை தெரியாத கேள்விகள். இப்பொழுது தமிழ்நாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக விடை தெரியாத கேள்விகள் தான் இந்த அரசாங்கம் எதற்கும் கவலைப்படுவதாக தெரியவில்லை, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விதமான கேள்விகள் எழுந்து கொண்டு தான் இருக்கிறது. பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. UGC வரைவு அறிக்கை கால நீட்டிப்பு குறித்து, மாநில அரசு மற்றும் மத்திய அரசின் கருத்துக்களை கேட்பதற்காக கால நீட்டிப்பு கொடுப்பது இயல்பானது தான் என்றார்.

தமிழக வெற்றி கழகத்தினுடைய தலைவர் விஜய், சரியான ஒரு விஷயத்தை கூறுகிறார். அவர் கூறுவதைப் போல மாநில அரசு ஒரு காலத்திலும் நேர்கோட்டில் பயணிக்கவே இல்லை. அதனால் தான் தமிழகத்திற்கு இவ்வளவு பிரச்சனைகள். இங்கு சாதிவாரி கணக்கெடுப்பு என்பது மாநில அரசு நடத்தலாம், பீகாரில் நடந்து இருக்கிறது. அதை மாநில அரசே நடத்த முடியும், ஆனால் வேண்டும் என்றே மத்திய அரசுதான் நடத்த வேண்டும் என்று பிரச்சனையை திசை திருப்புகிற வேலையில் தி.மு.க அரசு ஈடுபட்டு உள்ளது என்று கூறினார்.

பேரூர் கோவிலில் குடமுழுக்கு தமிழில் தான் நடத்த வேண்டும் என்று போராட்டம் நடந்து கொண்டு இருக்கிறது என்ற கேள்விக்கு, ஆலயங்களில், செய்யப்படக் கூடிய பூஜைகளில், அதிலும் தமிழ் மொழி என்பது ஆன்மீகத்தில் பஞ்சமே இல்லாதது. தமிழில் இல்லாதது எதுவுமே இல்லை. அதனால் தமிழுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும், எந்த பூஜை செய்தாலும் தமிழுக்கு வாய்ப்பு இருந்தால் தமிழிலேயே செய்யுங்கள் என்று கூறினார். இறைவனுக்கு எந்த விதமான மொழி பேதமும் கிடையாது. தமிழை எந்த விதத்திலும் புறக்கணிக்கக் கூடாது என்று கூறினார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 70% வாக்குப் பதிவு நடைபெற்றது பற்றிய கேள்விக்கு, கிரவுண்டில் யாருமே இல்லை, எல்லோரையும் வெளியே அனுப்பி விட்டு நான் சிக்ஸ் அடிக்கிறோம் என்று சொல்லி, அப்பொழுதும் கூட ஓட்டுக்கு பணம் கொடுத்து, ஆட்களை மந்தைகள் அடைத்து வைத்து கொடூரமாக நடந்தது, எதிர்க்கட்சிகள் அனைத்துமே இந்த விளையாட்டில் நாங்கள் இல்லை என்று சொல்லி விட்டது என்றார்.