பாஜக, ஆர்எஸ்எஸ் சேர்ந்து அம்பேத்கருக்கு எதிராக பேசி வருகின்றன: டி.ராஜா!

பாஜக, ஆர்எஸ்எஸ் சேர்ந்து அம்பேத்கருக்கு எதிராக பேசி வருகின்றன என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் டி.ராஜா நேற்று கூறியதாவது:-

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா நிகழ்வுகள் நாடு முழுவதும் நடந்து வருகின்றன. பஞ்சாபில் கட்சியின் தேசிய மாநாடு செப்டம்பர் 21 முதல் 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

பாஜக, ஆர்எஸ்எஸ் சேர்ந்து அம்பேத்கருக்கு எதிராக பேசி வருகின்றன. மதரீதியான மோதல்களை உருவாக்க முயற்சி செய்து வருகின்றன. இந்திய பொருளாதாரம் தனியார்மயம் ஆக்கப்பட்டு வருகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான அரசாக மத்திய பாஜக அரசு செயல்படுகிறது. பெரு முதலாளிகளிடம் பொதுத் துறை நிறுவனங்கள் ஒப்படைக்கப்படுகின்றன.

வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி, பணவீக்கம் அதிகரித்துள்ளது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது. அந்நிய செலாவணி கடன் அதிகரித்துள்ளது. ஏழைகளை வஞ்சித்த மத்திய பட்ஜெட்டை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறோம். வரும் 14 முதல் 20-ம் தேதி வரை நாடு தழுவிய அளவில் மக்களை சந்திக்கும் பேரியக்கம் நடத்தப்படும்.

சமூக நீதி, சமத்துவத்தை வலியுறுத்தியும், பாஜக அரசிடம் இருந்து மக்களை காப்பதற்கும் மார்ச், ஏப்ரலில் அரசியல் சித்தாந்த பேரியக்கத்தை நடத்த உள்ளோம். அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள், காலில் சங்கிலியால் கட்டி விமானத்தில் அழைத்து வரப்பட்டதை கண்டு நாடே அதிர்ச்சி அடைந்துள்ளது. இந்தியாவை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவமானப்படுத்தி உள்ளார். இந்தியா இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.

பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் எங்கு நடந்தாலும், அதுகுறித்து அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த அனைத்து மாநிலங்களிலும், மத்திய தொழிற்சங்கங்களாலும் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. தமிழகத்திலும் இது வலியுறுத்தப்படுகிறது. இதுகுறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.