மாஞ்சோலை மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் ஒருவார்த்தை கூட பேசவில்லை: டாக்டர் கிருஷ்ணசாமி!

திருநெல்வேலி மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், பாதிக்கப்பட்ட மாஞ்சோலை மலையகத் தொழிலாளர்களிடம் வெறும் மனுவை மட்டும் வாங்கி வைத்துக் கொண்டு அவர்களின் குறையை ஒருவார்த்தை கூட கேட்காமலேயே திருப்பி அனுப்பியது அப்பட்டமான மனித உரிமை மீறல் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி குற்றம்சாட்டி உள்ளார்.

இது தொடர்பாக டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளதாவது:-

மாஞ்சோலை மலையக மக்கள் கடந்த 9 மாதங்களாக எவ்வித வருமானமும் இன்றி அரைபட்டினி நிலையில் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். மாஞ்சோலை மக்களிடம் தமிழ்நாடு முதலமைச்சர் நடந்து கொண்டது அப்பட்டமான மனித உரிமை மீறல்.!

மனித உரிமை ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றம் வரையிலும் போராட்டக் குரல் ஓங்கி ஒலிக்கிறது. ஆனால் ஏனோ தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மட்டும் அவர்களின் அவலக் குரல் கேட்கவில்லை.!

பிப்ரவரி 7 ஆம் தேதி நெல்லை வரும் முதல்வர் மாஞ்சோலை மக்களைச் சந்திக்க உள்ளார் என்ற செய்திகள் ஊடகங்களில் வந்தன. அவர் ‘எந்த நற்செய்தியோடு மக்களைச் சந்திக்க வருகிறார்’ எனக் கேள்வி எழுப்பியிருந்தோம்! அதற்கு எவ்வித பதிலும் இல்லை. ஆனால், முதல்வரை சந்திக்க வேண்டும் என்று பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆறாம் தேதி இரவே மாஞ்சோலையிலிருந்து அழைத்துவரப்பட்டு பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அதிகாரிகளால் அழைத்து வரப்பட்டத் தொழிலாளர்கள் எவரும் காலை ஒன்பது மணி வரையிலும் முதல்வரை சந்திக்க அழைத்துச் செல்லப்படவில்லை. அதிர்ச்சியுற்ற தொழிலாளர்கள் தங்களை முதல்வரிடம் அழைத்துச் செல்ல வேண்டும் என சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அதன் பின்னர் ஆறு பேர் சுற்றுலா மாளிகைக்கு அழைத்துக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர், முதல்வர் தொழிலாளர்களிடம் என்ன குறை என்று கூட கேட்காமல் ஒரு வார்த்தை கூட பேசாமல் மனுவை மட்டும் வாங்கிக் கொண்டு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இதுதான் ஏழை எளிய மக்களின் மக்களிடம் ஓர் அரசு நடந்து கொள்ளும் முறையா? முதல்வர் தொழிலாளர்களிடம் நடந்து கொண்டது எதன் வெளிப்பாடு?

மண்ணுரிமையும் வாழ்வுரிமையும் மீட்கப் போராடிக் கொண்டிருக்கும் மாஞ்சோலை மக்களிடம் தமிழ்நாடு முதலமைச்சர் நடந்து கொண்டது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும். இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.