பெரியார் பற்றிய கருத்துகளுக்கு வாக்கினை மாற்றி போட வைக்கும் சக்தி கிடையாது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் விசி சந்திரகுமாரின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திமுக தொண்டர்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுகவின் இந்த வெற்றி குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது:-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஏராளமானோர் வாக்கு செலுத்தவில்லை. வாக்கு சதவிகிதம் குறைந்துள்ளது. அதேபோல் நோட்டாவுக்கான வாக்குகள் அதிகரிக்கும். நிச்சயம் ஈரோடு பகுதியில் நோட்டாவுக்கு கிடைத்துள்ள வாக்குகள் அதிகம்தான். இந்த இடைத்தேர்தல் மக்களிடையே எழுச்சி இல்லாத, உற்சாகமில்லாத தேர்தல். என்னை பொறுத்தவரை வாக்கு வங்கி இங்கு போனதா, அங்கு போனதா என்று சொல்வதை விடவும் மக்களே உற்சாகமாக பங்கேற்காத தேர்தலாக பார்க்கிறோம். ஏற்கனவே திமுகவின் வெற்றி எழுதப்பட்ட ஒன்று தான். தொடக்கம் முதலே இந்த இடைத்தேர்தலுக்கு திமுகவும் பெரிதாக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. முதலமைச்சர் உள்ளிட்ட யாரும் பிரச்சாரம் செய்யவில்லை.
எங்களை பொறுத்தவரை பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை புறக்கணித்ததால் தான், மக்களை பட்டியில் அடைத்து வைத்த கொடூரம் நிகழவில்லை. இந்த தேர்தல் களத்தில் நான் ஏற்கனவே பார்த்துள்ளோம். அதேபோல் பெரியாரை யாரும் புகழ்ந்து பேசினால் ஓட்டு கிடைக்குமா? அல்லது பெரியாரை தாக்கி பேசினால் வாக்குகள் மாற்றமடைந்து அதிகரிக்குமா என்று நிச்சயம் கிடையாது. அந்த காலம் மாறிவிட்டது. பெரியாரை பிடித்தவர்கள் இருக்கிறார்கள். பெரியாரை பிடிக்காதவர்களும் இருக்கிறார்கள். அதற்காக வாக்கினை மாற்றி போடும் அளவிற்கு சக்தி இருக்கா என்று கேட்டால், நிச்சயம் இல்லை. சீமான் உள்ளிட்டோர் ஒரு வாதத்தை முன் வைத்தார்கள். பெரியார் தொடர்புடைய வாதம் கொஞ்சம் கூடுதலாக சென்றுவிட்டதோ என்ற எண்ணம் இருக்கிறது. அதனால் பெரியாரை பற்றிய கருத்துகளுக்கு வாக்கினை மாற்றி போட வைக்கும் சக்தி கிடையாது. அதனைதான் ஈரோடு உணர்த்தி இருக்கிறது. பெரியாரை கடந்து தமிழ்நாடு பயணித்துவிட்டது. ஒருவேளை பெரியாரால் தான் நாம் தமிழர் தோல்வியடைந்துவிட்டது என்று திமுகவினர் நினைத்தால், அவர்களுக்கு அரசியல் தெரியவில்லை என்றுதான் சொல்வேன். யாரும் இல்லாத இடத்தில் நாதக மட்டுமே இருந்துள்ளது. அதனால் திமுகவிற்கு கிடைத்துள்ள வாக்கு சதவிகிதம், பெரியாரை எதிர்த்து பேசியதால் வாக்குகள் கிடைத்தது போன்ற வாதத்தை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.