இந்தியா கூட்டணிக்கு மக்கள் சம்மட்டி அடி கொடுத்துள்ளனர் என்று தில்லி பேரவைத் தேர்தல் குறித்து அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சேலத்தில் மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சனிக்கிழமை ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது. சிறுமிகள் முதல் பெண்கள் வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவது கண்டனத்துக்குரியது. கிருஷ்ணகிரி பள்ளியில் நடைபெற்ற பாலியல் சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. வேலூரில் ஓடும் ரயிலில் கர்ப்பணி பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம் வேதனை அளிக்கிறது. காவல்துறைக்கே பாதுகாப்பில்லை என்றால் பொதுமக்களுக்கு யார் பாதுகாப்பு கொடுப்பது? குற்றசெயலில் ஈடுபடுபவர்கள் எவ்வித அச்சமுமின்றி குற்றச் செயலில் ஈடுபடுகின்றனர். தமிழகம் கொலை நடைபெறும் மாநிலமாக இருக்கிறது; மோசமான ஆட்சிக்கு இதுவே சான்று.
தில்லி தேர்தல் முடிவுகள் இந்தியா கூட்டணிக்கு சம்மட்டி அடி. இந்தியா கூட்டணி இருக்கிறதா என்பதே சந்தேகமாக இருக்கிறது. ஈரோடு இடைத்தேர்தல் திமுக பெற்றது போலி வெற்றி. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் பலமான கூட்டணி அமையும். கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் அறிவிப்போம். ஸ்டாலின்தான் தமிழக மக்களுக்கு அல்வா கொடுக்கிறார். திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகள் பெரும்பாலும் நிறைவேற்றபடவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக இன்று சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் கட்சி பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.