திமுகவுக்கு தோல்விகரமான வெற்றி இது: தமிழிசை செளந்தரராஜன்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக அடைந்திருப்பது தோல்விகரமான வெற்றி என்று பாஜக மூத்த நிர்வாகி தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பிப்.5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அன்றைய தினம் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதுவரை 6 சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில் திமுக வேட்பாளர் விசி சந்திரகுமார் 38,428 வாக்குகளும், நாதகவின் சீதாலட்சுமி 7,791 வாக்குகளும் பெற்றிருக்கின்றனர். ஏற்கனவே அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணித்துவிட்டன. இருப்பினும் கடந்த இடைத்தேர்தலோடு ஒப்பிடும் போது கணிசமான அளவில் வாக்கு சதவிகிதம் பதிவாகியது. சுமார் 72 சதவிகிதம் வரை வாக்குகள் பதிவாகியதால், திமுக மற்றும் நாதக ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையில் கடுமையான போட்டி இருக்கும் என்று பார்க்கப்பட்டது. ஆனால் தபால் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கி ஒவ்வொரு சுற்றுகளின் முடிவிலும் திமுக வேட்பாளர் விசி சந்திரகுமார் தான் முன்னிலையை தக்க வைத்திருக்கிறார். அவருக்கு சவால் அளிக்கும் வகையில் கூட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி வாக்குகளை பெறவில்லை. இதனால் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் உற்சாகத்தில் கொண்டாடி வருகின்றனர்.

திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தலைமையேற்றதில் இருந்து அந்தக் கட்சி போட்டியிட்ட பெரும்பாலான தேர்தல்களில் தொடர்ந்து வெற்றிபெற்று வருகின்றன. அந்த வரிசையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலும் இணைந்துள்ளது.

திமுகவின் இந்த வெற்றி குறித்து பாஜக மூத்த தலைவரான தமிழிசை செளந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், திமுகவுக்கு தோல்விகரமான வெற்றி இது. போட்டி போடுவதற்கு ஓட்டப் பந்தயத்தில் ஆளே இல்லை. இதனால் கோப்பையை நான்தான் வென்றேன் என்பதில் எந்த பெருமையும் கிடையாது. மற்றவர்கள் நம்பிக்கையோடு போட்டி போடுவதற்கான சூழலை ஏற்படுத்தவில்லை. திமுக களங்கப்பட்டு நின்றதால், களத்தில் யாரும் இல்லை. அதனால் இதனை உண்மையான வெற்றி கிடையாது. நாங்கள் போட்டிபோடவில்லை. அதனால் கருத்து சொல்வது சரியாக இருக்காது. இருந்தாலும் இந்த வெற்றி, ஒரு வெற்றியே அல்ல என்பதே என் கருத்து என்று கூறியுள்ளார்.