மத்திய அரசு எத்தனை தடைகளை ஏற்படுத்தினாலும் தமிழகத்தை வளர்த்தெடுப்போம்: மு.க.ஸ்டாலின்!

தமிழகத்தின் வளர்ச்சியை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது. மத்திய அரசு உங்களால் ஆன தடைகளை ஏற்படுத்துங்கள். அந்தத் தடைகளை தகர்த்தெறிந்து தமிழகத்தை வளர்த்தெடுப்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மோடி அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

இந்தக் கூட்டத்தைத் தொடங்கும் முன்பு, ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்களோடு நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். பெரியார் மண்ணில் நாம் பெரு வெற்றி பெற்றுவிட்டோம். ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலில், கழகத்தை எதிர்த்து போட்டியிட்ட அத்தனை பேரும் டெபாசிட் இழந்திருக்கிறார்கள் என்ற வெற்றிச் செய்தியை, இந்தக் கூட்டத்தின் வாயிலாக உங்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசிற்கு எதிராக, இன்றைக்குத் தமிழ்நாடு முழுவதும் நாம் கண்டனப் பொதுக்கூட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம்! நடத்திக் கொண்டிருக்கிறோம் என்று சொல்வதைவிட, நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம் என்றுதான் சொல்ல வேண்டும்! மிகவும் வேதனையான மனநிலையோடு இந்தக் கூட்டத்தை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம்!

தொண்டை மண்டலத்தின் நுழைவு வாயிலாக – ஜார்ஜ் கோட்டைக்கு வழித்தடம் அமைத்த மாவட்டமாக விளங்கும் இந்த திருவள்ளூர் மாவட்டமும், தமிழ்நாட்டு உரிமைகளுக்கான போராட்டமும் பிரிக்க முடியாத ஒன்று! மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது நடந்த எல்லைப் போராட்டத்தில் இந்த மாவட்டத்துக்கு முக்கியப் பங்குண்டு! “திருத்தணி தமிழ்நாட்டுக்குதான் சொந்தம்” என்று ம.பொ.சி. அவர்கள் தலைமையில் நடந்த போராட்டத்தில் நாமும் இணைந்து போராடுவோம்! சித்தூர் திராவிட முன்னேற்றக் கழக மாநாட்டில், “திருத்தணி தமிழ்நாட்டுக்குத்தான் சொந்தம்” என்று தீர்மானம் நிறைவேற்றியதோடு, வட ஆற்காடு மாவட்டத்தில் இருப்பவர்களையும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள வைத்தார் பேரறிஞர் அண்ணா! அதுமட்டுமல்ல, அந்தப் போராட்டத்தை முன்னெடுத்த ம.பொ.சி அவர்களை, அன்றைய பிரதமர் நேரு அவர்கள் கடுமையாக விமர்சித்தார் என்று தமிழ்நாடு முழுவதும் ரயில் மறியல் அறிவித்தார் பேரறிஞர் அண்ணா!

திருத்தணியைக் காக்க தமிழ்நாடு முழுவதும் ரயில் மறியல் போர் நடத்தி கைதான இயக்கம்தான் நம்முடைய இயக்கம்! அப்போது பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் உள்ளிட்ட அனைவரும் சிறை வைக்கப்பட்டதால், கழகத்தின் பொறுப்பாளராக மதிப்பிற்குரிய ஏ.ஜி. அவர்களை நியமித்தார் அண்ணா! நம்முடைய போராட்டத்தைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் 17 இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.. அதில் நான்கு தொண்டர்கள் மரணம் அடைந்தார்கள்! இவ்வாறு திருத்தணியை அன்றைக்குக் காத்தோம்! இன்றைக்குத் தமிழ்நாட்டின் உரிமைக்குக் குரல் கொடுக்க ஒன்று கூடியிருக்கிறோம்!

இந்தப் பொதுக்கூட்டத்தை மிகப் பிரமாண்டமாகவும் – எழுச்சியோடும் ஏற்பாடு செய்திருக்கும் மாண்புமிகு நாசர் அவர்களை நான் மனதாரப் பாராட்டுகிறேன்! இளைஞரணி உருவான காலத்தில் இருந்து, என்னோடு தோள் கொடுத்து நிற்கும் தோழன்தான் நாசர் அவர்கள்! இன்றைக்குத் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு ஊரிலும் கழகக் கொடி கம்பீரமாகப் பறக்கிறதே, அதை ஏற்றி வைக்க நான் கிராமம் கிராமமாகச் சென்றபோது, என்னுடன் இருந்தவர் நம்முடைய அருமை நண்பர் நாசர் அவர்கள்! அன்றைக்கு எப்படி பார்த்தேனோ.. அதே துடிப்போடும் – பரபரப்போடும் இன்றைக்கும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்! அவருக்குப் பக்கபலமாகத் துணை நிற்கும் சந்திரன் உள்ளிட்ட திருவள்ளூர் மாவட்டக் கழகங்களின் நிர்வாகிகளுக்கும் – முன்னணியினர் அனைவருக்கும் என்னுடைய பாராட்டுகள்! வாழ்த்துகள்! நன்றிகள்! உங்களுடைய ஆதரவால் – உழைப்பால் உருவானதுதான் நம்முடைய திராவிட மாடல் ஆட்சி! அதற்கு நான் என்றென்றும் நன்றியுடையவனாக இருப்பேன்!

2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் என் மேல் நம்பிக்கை வைத்து, தமிழ்நாட்டு மக்கள் ஆட்சிப் பொறுப்பை வழங்கினார்கள்! மக்கள் என் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை நான் காப்பாற்றிக் கொண்டிருக்கிறேன்! இந்த மூன்றரை ஆண்டுகளில், ஏராளமான திட்டங்களை நிறைவேற்றி, தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக வளர்த்தெடுத்து வருகிறோம்! அது, ஊடகங்கள் வெளியிடும் புள்ளி விவரங்களாக இருந்தாலும் சரி – தனியார் அமைப்புகள் வெளியிடும் சர்வேக்களாக இருந்தாலும் சரி – ஏன், ஒன்றிய அரசே வெளியிடும் புள்ளி விவரங்களாக இருந்தாலும் சரி – அதில் அனைத்தும் தமிழ்நாடுதான் முன்னணியில் இருக்கிறது!

* இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலங்களின் பட்டியலில், தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது!

* தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு, உயர்ந்திருக்கிறது.

* 2030-ஆம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை அடைய வேண்டும் என்று ஒரு மிகப் பெரிய குறிக்கோளை வைத்து, நாள்தோறும் உழைத்துக் கொண்டிருக்கிறோம்!

* பொருளாதாரக் குறியீடுகள் அனைத்திலும், தமிழ்நாடு வளர்ச்சியை எட்டி இருக்கிறது.

* வறுமை இல்லாத மாநிலமாக – பட்டினிச் சாவுகள் அறவே இல்லாத மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கிறது.

* கடந்த மூன்று ஆண்டுகளில், 10 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தனியார் முதலீட்டுத் திட்டங்கள் வருவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த வளர்ச்சியுடன் ஒவ்வொரு தனிமனிதருக்கும் நன்மை அளிக்கும் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம்! முத்தாய்ப்பான சில திட்டங்களை மட்டும் சொல்ல விரும்புகிறேன்..

மாதம் ஆயிரம் ரூபாய் என்று, ஒரு ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாயை ஒரு கோடியே 16 லட்சம் பெண்களுக்கு, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் கொடுக்கிறோம்! அதே போன்று, புதுமைப்பெண் திட்டத்திலும் – தமிழ்ப்புதல்வன் திட்டத்திலும், ஆண்டொன்றுக்கு 12 ஆயிரம் ரூபாய் வழங்குகிறோம்! பெண் விடுதலைக்கு அச்சாரமாக, வேலைவாய்ப்புகளை உருவாக்கி, அவர்கள் இலவசமாகப் பயணம் செய்ய, “விடியல் பயணத் திட்டம்” – பாதுகாப்பாக வெளியூர்களில் தங்க, “தோழி விடுதித் திட்டம்” என்று செயல்படுத்திக் கொண்டு வருகிறோம்! இன்னும் சொல்ல வேண்டும் என்றால், அமைதியான – பாதுகாப்பான மாநிலமாக இருப்பதால், அதிகளவில் பெண்கள் வேலைக்குச் செல்லும் மாநிலமாக நம்முடைய தமிழ்நாடு இருக்கிறது! அடுத்து, வருங்காலத் தலைமுறை வலிமையான தலைமுறையாக வளர, சத்தான – சுவையான காலை உணவைக் கொடுக்கிறோம்! தமிழ்நாட்டு மாணவர்கள் என்றால், உடனே வேலை கொடுக்கும் அளவிற்கு, நம்முடைய மாணவர்களின் திறமையை மேம்படுத்த, நான் முதல்வன் திட்டத்தில் திறன் பயிற்சி கொடுக்குறோம்!

ஒன்றிய அரசு வெளியிட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் தமிழ்நாட்டின் பல்வேறு திட்டங்கள் பாராட்டப்பட்டிருக்கிறது. அனைத்துத் துறைகளிலும், மேல் நோக்கிய வளர்ச்சியைத் தமிழ்நாடு அடைந்து வருகிறது. இத்தகைய சூழலில் தமிழ்நாடு அரசுக்கு ஒத்துழைக்கும் ஒன்றிய அரசு மட்டும் இருந்திருந்தால் தமிழ்நாடு இன்னும் வேகமாக வளர்ந்திருக்க முடியும். தமிழ்நாட்டு மக்களான நீங்கள் முழுமையான வெற்றியை இந்தியா கூட்டணிக்குக் கொடுத்ததைப் போன்று, சில மாநிலங்களில் பெற முடியாததால், சிறிய வித்தியாசத்தில் மீண்டும் ஒன்றியத்தில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சியே அமைந்துவிட்டது. மூச்சுக்கு மூச்சு 400 சீட் வெற்றி பெறுவோம் என்று சொன்னாலும், இறுதியில் 240 இடங்கள்தான் கிடைத்தது. இறுதியில், கூட்டணிக் கட்சிகள் தயவோடு ஒரு மைனாரிட்டி அரசைத்தான் அமைக்க முடிந்தது. ஆனாலும், பா.ஜ.க. அரசு தன்னுடைய பாசிச – சர்வாதிகார – எதேச்சாதிகாரத் தன்மையை விட்டு இறங்காமல் – பழையபடியே நடந்து கொள்வதைத்தான் பார்க்கிறோம். மதவாத அரசியலை நடத்தி – மக்களை ஒரு மயக்கத்தில் வைத்து – அரசியல்ரீதியாக லாபம் அடையலாம் என்று நினைக்கிறார்களே தவிர, மக்களுக்கு நல்லது செய்து – மாநிலங்களுக்குத் திட்டங்களை தந்து வளர வேண்டும் என்ற நினைப்பே பா.ஜ.க.விற்கு வராது!

மதவாத அரசியல் மூலமாக, மக்களிடம் இருந்து ஓட்டு அறுவடை செய்து, காலத்தை ஓட்ட நினைக்கிறார்கள். அதனால்தான், மத்திய அரசின் சார்பில் ஆண்டுதோறும் வெளியிடப்படும் நிதிநிலை அறிக்கை, வெற்று அறிக்கையாக இருக்கிறது! ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிற்கே எதுவும் இல்லை. திருக்குறளை மேற்கோள் காட்டினால் போதும், தமிழ்நாட்டை ஏமாற்றிவிடலாம் என்று நினைக்கிறாரா நிதி அமைச்சர்? இப்போது புதிதாக தெலுங்கு கவிதையையும் மேற்கோள் காட்டுகிறார். ‘நாடு என்றால் வெறும் மண் அல்ல; அதன் மக்கள்தான்’ என்பது அப்பாராவ் எழுதிய அந்த கவிதையின் பொருள். அந்த மக்களுக்காக என்ன அறிவித்தார்கள்? எதுவும் இல்லை!

தெலுங்கில் ஒரு பழமொழி சொல்வார்கள்.. ‘பேரு பெத்த பேரு.. தாக நீலு லேது..’ என்று சொல்வார்கள். பெயர்தான் பெரிய பெயர் – ஆனால் குடிக்கத் தண்ணீர் கூட கொடுக்க மாட்டார்கள் என்று அதற்கு அர்த்தம். அது போன்றுதான் பெயர் என்னவோ ஒன்றிய பட்ஜெட் – இந்தியாவிற்கான பட்ஜெட் – வளர்ச்சி பட்ஜெட்! ஆனால், அது எதுவும் அதில் இருக்காது. அனைத்துப் பகுதிக்குமான வளர்ச்சியை உறுதி செய்திருப்பதாகப் பிரதமரும் – நிதி அமைச்சரும் சொல்கிறார்கள். அனைத்துப் பகுதியின் பெயரும் இந்த பட்ஜெட்டில் இடம் பெற்றிருக்கிறதா? என்று கொஞ்சமாவது மனச்சாட்சியுடன் பதில் சொல்லுங்கள். ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை என்பது அனைத்துத் தரப்பினரையும் ஏமாற்றும் வகையில் அமைந்திருக்கிறது. இவ்வாறு அவர் பேசியுள்ளார்.