தமிழகத்துக்கு மத்திய அரசு செய்து வரும் அநீதிக்கு எல்லையே இல்லை: முதல்வர் ஸ்டாலின்!

தமிழகத்துக்கு மத்திய அரசு செய்து வரும் அநீதிக்கு எல்லையே இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

தேசியக் கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக உள்ள PM SHRI திட்டத்தில் இணைய தமிழ்நாடு அரசு மறுத்ததால் தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை மத்திய அரசு பிற மாநிலங்களுக்கு மாற்றிவிட்டதாக வெளியான செய்தியை டேக் செய்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-

தமிழ்நாட்டுக்கு எதிரான ஒன்றிய பா.ஜ.க. அரசின் அட்டூழிய மனப்பான்மைக்கு அளவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. தேசிய கல்விக் கொள்கையையும், அதன்வழி மும்மொழிக் கொள்கையையும் திணிப்பதை நிராகரித்த காரணத்துக்காக, அப்பட்டமான அச்சுறுத்தல் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். தமிழ்நாட்டு மாணவர்களுக்குரிய 2,152 கோடி ரூபாயைப் பறித்து, தற்போது வேறு மாநிலங்களுக்கு அளித்துள்ளனர். தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் மாணவர்களைத் தண்டிக்கும் நோக்கில் இத்தகைய வலுக்கட்டாயமான செயலைச் செய்கின்றனர்.

இந்திய வரலாற்றில் வேறு எந்த அரசும் ஒரு மாநிலத்தை அரசியல்ரீதியாகப் பழிவாங்குவதற்காக மாணவர்களின் கல்விக்குத் தடை ஏற்படுத்தும் அளவுக்குக் இரக்கமில்லாமல் நடந்துகொண்டதில்லை. தமிழ்நாட்டு, தமிழ் மக்கள் மீதான வெறுப்பு மற்றும் நமக்கு இழைக்கப்படும் அநீதியின் முழு உருவம் பா.ஜ.க. என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகியுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.