“அத்திக்கடவு-அவிநாசி திட்ட விழாவை புறக்கணிக்கிறேன் என்பதைக் காட்டிலும், என்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறேன்” என்று கொள்ளலாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊராட்சி மன்றங்களை நகராட்சி, பேரூராட்சிகளுடன் இணைப்பதை மறுபரீசிலனை செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் இன்று (பிப்.10) மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், அத்திக்கடவு – அவிநாசி திட்ட விழாவில் நீங்கள் பங்கேற்காதது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறதே? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது:-
அத்திக்கடவு-அவிநாசி திட்டம் என்பது 60 ஆண்டு கால கனவுகள். இந்தக் கனவுத் திட்டத்துக்காக கடந்த 2011-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, ரூ.3 கோடியே 72 லட்சம் நிதியை வழங்கினார். 2011-ல் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த ராமலிங்கம், அத்திட்டம் தொடர்பான ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு, அந்தப் பணிகள் நடைபெற்றன. அதன்பிறகு, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காலத்தில் திட்டம் நிறைவேற்றப்பட்டன. அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் பாராட்டுக் குழுவைச் சார்ந்திருக்கிற, நான்கு பேர் என்னைச் சந்தித்தனர்.
இவர்களில், நடராஜன், வெள்ளியங்கிரி, மற்றொரு வெள்ளியங்கிரி மற்றும் மூர்த்தி ஆகிய 4 பேரும் என்னை சந்தித்து, அந்த நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு எனக்கு அழைப்பு விடுத்தனர். அப்போது நான், எங்களை வாழவைத்த தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது படங்கள் அழைப்பிதழில் இல்லை. நீங்கள் என்னிடம் கலந்து பேசியிருந்தால், என்னுடைய உணர்வுகளை உங்களிடம் பிரதிபலித்திருப்பேன். 3 நாட்களுக்கு முன்பாகத்தான், எங்களுக்கு அழைப்பிதழை தருகிறீர்கள் என்றேன். இதுதான் என்னுடைய உணர்வுகள். அத்திக்கடவு-அவிநாசி திட்ட விழாவை புறக்கணிக்கிறேன் என்பதைக் காட்டிலும், என்னுடைய உணர்வுகளை அவர்களிடம் வெளிப்படுத்தியிருக்கிறேன் என்று சொல்லலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, அத்திக்கடவு-அவிநாசி திட்டம் நிறைவேற்றக் காரணமாக இருந்ததாக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான பழனிசாமிக்கு, அத்திக்கடவு-அவிநாசி திட்டக் கூட்டமைப்பினர் சார்பில் கோவை மாவட்டம் அன்னூர் கஞ்சப்பள்ளி பகுதியில் நேற்று (பிப்.9) பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்காதது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் அது குறித்து செங்கோட்டையன் விளக்கம் கொடுத்துள்ளார்.