விஜய் வீதிக்கு சென்று மக்களை சந்திக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்!

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் முற்றிலும் அரசியல் இருக்கிறது என மதுரையில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டினார்.

மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் தேமுதிக மாவட்ட நிர்வாகி ஒருவரின் இல்ல திருமண விழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்று, மணமக்களை வாழ்த்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ஆளுங்கட்சி தங்களது பிரச்சினைகளிலிருந்து காப்பாற்றிக் கொள்ள எதையாவது ஒன்றை சொல்லி தப்பிக்கின்றனர். மத்திய பட்ஜெட் குறித்து தமிழக முதல்வர் கூறுவது போன்று இல்லை. எல்லாம் மாநிலத்திற்கும் பொதுவாகத்தான் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முதல்வர் என்ன செய்தார். நானும் டெல்டாக்காரன் என பேசுகிறார்.

எப்போதுமே மத்திய அரசை குற்றம் சாட்டும் தமிழக அரசு என்ன செய்கிறது? இந்தியாவில் அதிக கடன் இருக்கும் மாநிலம் தமிழ்நாடு. இது போன்ற உதாரணங்கள் இருக்கும்போது, சாக்குபோக்கு சொல்லி முதல்வர் தப்பிக்க முடியாது. தமிழ்நாட்டில் முதல் முறையாக யார் கூட்டணியும் இன்றி தனித்துப் போட்டியிட்டு சாதனை செய்தது தேமுதிக மட்டுமே.

75 ஆண்டு கட்சியான திமுக கூட்டணியை தவிர்த்து தனித்து நிற்க முடியுமா? அதிமுக, பாஜக தனித்து நிற்க முடியுமா? தமிழகத்தில் சிறு குழந்தைகள், மாணவிகள் வயதானவர்கள் வரை பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு டாஸ்மாக், கஞ்சா புழக்கமே காரணம். பாலியல் வன்கொடுமையில் குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும்.

விஜய் எங்கள் வீட்டு பையன். அரசியல் வேறு ,சினிமா வேறு என்பதை அவர் புரிந்து கொள்ளவேண்டும். நாலுக்கு நாலு சுவற்றில் அமர்ந்து கொண்டு அரசியல் செய்யாமல் வீதிக்கு சென்று மக்களை சந்திக்க வேண்டும். இது பற்றி விஜய்யிடமும் நேரில் தெரிவித்திருக்கிறேன். சினிமாத்துறையில் அனைத்தையும் விட்டுவிட்டு அரசியலுக்கு வந்த அவரை நாம் பாராட்டவேண்டும். என்ன சாதிக்கப் போகிறார், சரித்திரம் படைக்கப் போகிறார் என்பதை பார்க்க நாங்களும் காத்திருக்கிறோம். நாலுக்கு – நாலு அறையில் அமர்ந்து பேசுவதை விட்டுட்டு அவர் வெளியே வரவேண்டும்.

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இந்து- முஸ்லிம் மக்கள் அண்ணன், தம்பிகளாக பல ஆண்டாக வாழ்கின்றனர். இத்தனை ஆண்டாக வராத பிரச்சனை இப்போது வருகிறது. இதற்கு பின்னால் முற்றிலும் அரசியல் இருக்கிறது. மதம், ஜாதியை பிரித்து அரசியல் செய்ய பார்க்கின்றனர். இந்துக்கள் இஸ்லாமியர்களிடையே எந்த பிரிவும் இல்லை. இது ஆபத்தான விஷயம். திமுக ஆட்சிக்கு வந்தால் இது போன்ற சம்பவம் நடப்பது வழக்கமாகிறது. திருப்பரங்குன்றம் மலை விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

டெல்லியில் கேஜ்ரிவால் தோல்வி அடைந்து இருக்கிறார். 15 ஆண்டாக ஆட்சியில் இருந்த அவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு இருந்தது. அரவிந்த் கேஜ்ரவால் ஊழல் குற்றத்தை சரி செய்து நிரூபிக்க முடியவில்லை. தமிழக ஆளுநர் சட்டசபைக்கு வருவது, கோபித்துக் கொண்டு செல்வது, தேநீர் விருந்தில் சில கட்சிகள் கலந்து கொள்வது, அனைத்தையும் பார்த்துக் கொண்டே இருக்கிறோம். அனைத்துக்கும் பின்னால் அரசியல் இருக்கிறது. ஆளுநர் அவரது உரிமையை பேசுகிறார். ஆளுங்கட்சியும் அவர்களின் உரிமையை பேசுகிறார்கள். இருவரும் முறைப்பதால் மக்களுக்கு தான் பிரச்னை. 234 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி ஜெயிக்கும். திமுக மீது மக்களுக்கு கோபம் இருக்கிறது. தேர்தலுக்காக திமுக இனிமேல் நீட் மற்றும் மதத்தை கையில் எடுப்பர். தமிழகத்தில் பட்டிதொட்டி எங்கும் தேமுதிக சிறப்பாக உள்ளது. இவ்வாறு பிரேமலதா கூறினார்.