வேலூர் அருகே ரயிலில் சென்று கொண்டிருந்த கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டு ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட சம்பவத்தில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த பரபரப்பு ஓய்வதற்குள்ளேயே திண்டுக்கல்லில் ஓடும் ரயிலில் இளம்பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நான்கு மாத கர்ப்பிணியான இளம்பெண் திருப்பூரில் பணியாற்றி வந்துள்ளார். இவர், தனது சொந்த ஊரான சித்தூருக்கு மருத்துவ பரிசோதனைக்காக சொந்த ஊருக்கு பிப்ரவரி 6 ஆம் தேதி புறப்பட்டுள்ளார். கோவை – திருப்பதி பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயிலில் சொந்த ஊருக்குப் புறப்பட்ட அவர் மகளிர் பெட்டியில் சென்றுள்ளார். ஜோலார்பேட்டை அருகே சென்றபோது மகளிர் பெட்டியில் இளைஞர் ஒருவர் ஏறியுள்ளார். அப்போது, அந்த சமயத்தில் மகளிர் பெட்டியில் பயணித்த அனைவரும் அந்த நிறுத்தத்தில் இறங்கிய நிலையில் கர்ப்பிணிப் பெண் மட்டும் தனியாக இருந்துள்ளார். ரயிலில் ஏறிய இளைஞர் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அச்சமடைந்த கர்ப்பிணி பெண் உடனடியாக ரயிலின் செயினை இழுத்து ரயிலை நிறுத்த முயன்றுள்ளார். அந்த நபர் தொடர் பாலியல் தொல்லை கொடுத்த நிலையில் கர்ப்பிணி பெண் கூச்சலிட்டுள்ளார். ஆத்திரமடைந்த அந்த நபர் கர்ப்பிணி பெண்ணை வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே ரயில் வந்து கொண்டிருந்தபோது ரயிலிலிருந்து கீழே தள்ளிவிட்டுவிட்டு ரயில் காட்பாடி நிலையம் வந்ததும் அந்த நபர் இறங்கிச் சென்றுள்ளார். ரயிலில் இருந்து கீழே தள்ளி விட்டதில், கர்ப்பிணிக்கு கை கால் முறிவு ஏற்பட்டதோடு தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் நான்கு மாத சிசுவும் உயிரிழந்துள்ளது.
இந்நிலையில், அந்த பரபரப்பு ஓய்வதற்குள்ளேயே திண்டுக்கல்லில் ஓடும் ரயிலில் இளம்பெண் ஒருவருக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீஸார் இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் 26 வயதுடைய இளம்பெண். இவர் அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகி வருகிறார். இதற்காக தூத்துக்குடியில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் தங்கி பயிற்சி பெற்று வருகிறார். இந்நிலையில், அந்த இளம்பெண் அவருடைய தந்தைக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால் அவரை பார்ப்பதற்காக சொந்த ஊருக்காக சென்றுள்ளார். இதற்காக தூத்துக்குடியில் இருந்து ஈரோட்டுக்கு ரயிலில் முன்பதிவில்லாத பெட்டியில் பயணித்துள்ளார்.
இந்நிலையில், அதே ரயிலில் அருப்புகோட்டையைச் சேர்ந்த பெயிண்டரான சதீஷ்குமார் என்ற இளைஞர் விருதுநகர் ரயில் நிலையத்தில் ஏறியுள்ளார். அவர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. திண்டுக்கல் கொடை ரோடு அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது திடீரென சதீஷ் குமார் அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். அச்சமடைந்த அந்த இளம்பெண் 139 என்ற உதவி எண்ணுக்குத் தொடர்பு கொண்டு புகார் செய்துள்ளார். தகவலறிந்த திண்டுக்கல் போலீஸார் உடனடியாக அடுத்த ரயில் நிலையத்தில் ரயிலில் ஏறி ஆய்வு செய்து இளைஞர் சதீஷ்குமாரை கைது செய்தனர். அந்த நபரிடம் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் சம்பவ அதிர்ச்சியில் இருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில் மீண்டும் இளைஞர் ஒருவர் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.