தமிழ்நாடு வன்முறைக் காடாக காட்சியளிக்கிறது: ஓ.பன்னீர்செல்வம்!

முதல்-அமைச்சரே அமைதியை சீர்குலைக்க சதி நடக்கிறது என்று சொல்வது, தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு ஓர் எடுத்துக்காட்டு என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து சென்னையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய முதல்-அமைச்சர் தமிழகம் அமைதிப் பூங்காவாக உள்ளதாகவும், தமிழகத்தின் அமைதியை சீர்குலைத்து வளர்ச்சியை தடுக்க சதி நடப்பதாகவும் பேசி இருப்பது நகைப்புக்குரியதாக உள்ளது. தமிழகம் அமைதிப் பூங்காவாக விளங்குகிறது என்பது முற்றிலும் உண்மைக்கு மாறான தகவல். பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகள், நீதிமன்ற வளாகங்கள், காவல் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், பேருந்துகள் என எங்குமே பாதுகாப்பு இல்லாத ஒரு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. போதைப் பொருட்களின் புகலிடமாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது. எப்பொழுது என்ன நடக்குமோ என்ற பீதியில் பொதுமக்கள் இருக்கின்றார்கள். பெண்களால் சாலையில் நடக்க முடியாத அளவுக்கு பாலியல் வன்கொடுமைகள் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. பெரும்பாலான முக்கிய வழக்குகளில் குற்றவாளிகள் கண்டுபிடிக்காத சூழ்நிலை உள்ளது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், தமிழ்நாடு வன்முறைக் காடாக காட்சியளிக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழ்கிறது என்று முதலமைச்சர் கூறுவது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது.

அடுத்தபடியாக, தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைத்து வளர்ச்சியை தடுக்க சதி நடப்பதாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பேசி இருக்கிறார். சதியைத் தடுக்க வேண்டிய இடத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இருக்கிறார். மாண்புமிகு அமைதியை நிலை நாட்ட வேண்டிய முதலமைச்சரே அமைதியை குலைக்க சதி நடப்பதாகக் கூறுவது தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு ஓர் எடுத்துக்காட்டு

முதல்-அமைச்சர் கட்டுப்பாட்டில் மிகப் பெரிய காவல் துறை இயங்கி வருகிறது. முதல்-அமைச்சருக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, சட்டம்-ஒழுங்கை நிலை நாட்ட வேண்டிய பொறுப்பு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு உண்டு. ஆனால், இந்தக் கடமையைச் செய்ய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தவறிவிட்டார். அமைதியை சீர்குலைக்க சதி நடக்கிறது என்றால் அதனை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். அந்த அதிகாரம் முதல்-அமைச்சர் கையில்தான் இருக்கிறது. இதைச் செய்யாமல், முதல்-அமைச்சரே அமைதியை சீர்குலைக்க சதி நடக்கிறது என்று சொல்வது, தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு ஓர் எடுத்துக்காட்டு.

தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு முதல்-அமைச்சர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பதுபோல் அவருடைய பேச்சு அமைந்துள்ளது. இது பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் செயல். முதல்-அமைச்சர் தனக்குள்ள அதிகாரத்தினைப் பயன்படுத்தி, இனியாவது, அமைதியை சீர்குலைத்து வளர்ச்சியை தடுக்க நினைப்பவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.