“பிரசவ காலத்தில் குழந்தைகள் இறப்பது தமிழகத்தில் 1,000 பேருக்கு 2 என்ற அளவிலேயே இருக்கிறது. பச்சிளம் குழந்தைகள் மரணிப்பதில் பெரிய மாநிலங்களைப் பொறுத்தவரை ஆயிரம் குழந்தைகளில் 9 பேர் என்ற குறைந்த எண்ணிக்கையைப் பதிவு செய்து சிறப்பாக செயல்பட்டு தமிழகம் முதன்மை மாநிலமாக இருக்கிறது” என்று மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். திமுக எம்.பி. கனிமொழி என்.வி.என்.சோமு எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.
மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி என்.வி.என். சோமு, ‘இந்தியாவில் பிரசவ கால தாய் சேய் மரணங்கள், பச்சிளம் குழந்தை மரணங்கள் எவ்வளவு? அதைத் தடுக்க, குறைக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? இந்தியாவில் 16 சதவீத கர்ப்பிணிப் பெண்களுக்கு எந்தவிதமான ஊட்டச்சத்தும் வழங்கப்படுவதில்லை என்பது உண்மைதானா?’ என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா அளித்த பதிலில் கூறியுள்ளதாவது:-
இந்தியாவில், பிரசவ காலத்தில் தாய் இறப்பது தொடர்பான எண்ணிக்கை கடந்த 30 ஆண்டுகளில் 83 சதவீதம் குறைந்திருக்கிறது. உலக அளவில் இதே கால கட்டத்தில் 42 சதவீதம்தான் குறைந்திருக்கிறது. பச்சிளம் குழந்தைகள் மரணிக்கும் விகிதமும் இந்தக் காலகட்டத்தில் 65 சதவீதம் குறைந்திருக்கிறது. உலக அளவில் இது 51 சதவீதமாக இருக்கிறது.
மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து பிரசவ காலம் தொடர்பான, கர்ப்பிணிகள் தொடர்பான விழிப்புணர்வு முகாம்களை மத்திய அரசு நாடு முழுக்க நடத்துகிறது. குறிப்பாக மாதத்தில் ஒருநாள் கிராமப்புற பகுதிகளில் விழிப்புணர்வு முகாம் நடத்துவது, சுகாதார மேளாக்கள் நடத்துவது, ஊட்டச்சத்து இலவசமாக வழங்குவது மற்றும் அது தொடர்பான ஆலோசனை வழங்குவது, குழந்தையின்மை தொடர்பான சிகிச்சைகளுக்கு ஆலோசனை வழங்கும் முகாம்கள் நடத்துவது, நடமாடும் சுகாதார மையங்களை கிராமப்புறங்களில் பயன்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகின்றன.
இதுதவிர பிரசவ காலத்தைக் கடக்கும் பெண்களின் நலனுக்காக பிரதமரின் பெயரில் அமைந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதம் 9-ம் தேதி இலவச சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கும் திட்டமும் அமலில் இருக்கிறது. இதற்காக 2021-22 ம் ஆண்டு 9 கோடி ரூபாயும், 2022-23 ம் ஆண்டில் 42 கோடி ரூபாயும், 2023-24ம் ஆண்டில் 83 கோடி ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கடந்த மூன்றாண்டுகளில் முறையே 3.46 லட்சம்; 3.29 லட்சம்; 3.31 லட்சம் கர்ப்பிணிப் பெண்கள் பயனடைந்திருக்கிறார்கள். இவ்வாறு அமைச்சர் ஜே.பி.நட்டா பதிலளித்தார்.
இந்த பதிலுடன் அவர் இணைத்துள்ள விபரங்களின் அடிப்படையில், “தமிழகத்தைப் பொறுத்தவரை, ஒரு லட்சம் கர்ப்பிணிகளில் 54 பேர் மரணிக்கிறார்கள் என்று தரவுகள் சொல்கிறது. பிரசவ காலத்தில் தாய் மரணிக்கும் நிகழ்வை குறைவாக வைத்திருக்கும் பெரிய மாநிலங்களில் தமிழகம் மூன்றாவது சிறந்த மாநிலமாகத் திகழ்கிறது. அதேபோல பிரசவ காலத்தில் குழந்தைகள் இறப்பது தமிழகத்தில் ஆயிரம் பேருக்கு இரண்டு என்ற அளவிலேயே இருக்கிறது. பச்சிளம் குழந்தைகள் மரணிப்பதில் பெரிய மாநிலங்களைப் பொறுத்தவரை ஆயிரம் குழந்தைகளில் 9 பேர் என்ற குறைந்த எண்ணிக்கையைப் பதிவு செய்து சிறப்பாக செயல்பட்டு தமிழகம் முதன்மை மாநிலமாக இருக்கிறது,” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.