மத்திய பட்ஜெட் டெல்லி தேர்தலை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டது என்று ப. சிதம்பரம் கூறியுள்ளார்.
2025-26ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் மீதான விவாதத்தை மாநிலங்களவையில் தொடங்கி வைத்து முன்னாள் மத்திய மந்திரி ப. சிதம்பரம் பேசியதாவது:-
2025-26 மத்திய பட்ஜெட், டெல்லி சட்டசபை தேர்தலை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. நிதிப் பற்றாக்குறையை மேம்படுத்துவதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறி வருகிறார். ஆனால், மத்திய அரசின் மூலதனச் செலவுகள் மற்றும் மாநிலங்களுக்கான மானிய உதவிகளைக் குறைத்துள்ளார். இது, மோசமான பொருளாதார நிர்வாகம். ஏழைகள் மற்றும் அடித்தட்டு மக்களை புறக்கணித்த பட்ஜெட். பட்ஜெட்டுக்குப் பின்னால் ஒரு உயரிய கருத்து இருக்க வேண்டும். ஆனால் இந்த பட்ஜெட்டில் அப்படி ஒன்றையும் கண்டுபிடிக்க முடியவில்லை. நான் அவ்வாறு கண்டுபிடிக்க முயற்சிக்க மாட்டேன்.
ஏனென்றால் பட்ஜெட் உரை மற்றும் பட்ஜெட் கணக்குகளை படித்த பிறகு, பட்ஜெட்டுக்குப் பின்னால் எந்த ஒரு கருத்தும் இல்லை என்று நான் நம்புகிறேன். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் தினசரி ஊதியத்தை உயர்த்தி இருக்கலாம். அதன்மூலம் ஆயிரக்கணக்கான மக்கள் பயன் அடைந்திருப்பர். மத்திய நிதி மந்திரி அவ்வாறு எதுவும் செய்யவில்லை. வருமான வரியில் கவனம் செலுத்தினார், டெல்லி தேர்தலில் மனதில் வைத்து கவனம் செலுத்தினார். இந்தியர்களுக்கு கைவிலங்கு போடப்பட்டதை மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஏன் எதிர்க்கவில்லை. அமெரிக்கா சென்றபோது கைவிலங்கு விவகாரத்தில் ஏன் மவுனம் சாதித்தார். அடுத்தமுறை இந்தியர்கள் திருப்பி அனுப்பப்படும்போது விமானம் அனுப்புமா அரசு?
பிஎல்ஐ மற்றும் மேக் இன் இந்தியா உள்ளிட்ட அரசாங்கத்தின் பல்வேறு திட்டங்கள் “அற்புதமான” தோல்விகள். இவை இலக்குகளை அடைய முடியவில்லை. வேலைவாய்ப்பை உருவாக்க முடியவில்லை. தற்போது நாடு எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் வேலையின்மை.
இந்தியக் குடும்பங்களின் சேமிப்பு 25.2 சதவீதத்தில் இருந்து 18.4 சதவீதமாகச் சரிந்துள்ளது. தரவுகளின்படி, ஒரு கிராமப்புற குடும்பத்தின் சராசரி மாதாந்திர செலவு ரூ. 4,226 ஆக இருந்தது. நகர்ப்புறங்களில் ரூ. 6,996 ஆக இருந்தது.சமுதாயத்தில் அடித்தட்டில் உள்ள 50 சதவீத சராசரி குடும்பங்களுக்கு மத்திய பட்ஜெட் என்ன அறிவித்துள்ளது. ஏழ்மையிலுள்ள 25 சதவீத குடும்பங்களுக்கு இந்த அறிவிப்பில் என்ன கிடைக்கும். கடந்த 7 ஆண்டுகளில் தனிநபரின் (ஆண்) மாத வருவாய் ரூ. 12,665-லிருந்து ரூ. 11,858 ஆக குறைந்துள்ளது. சுயதொழில் செய்யும் நபரின் (ஆண்) மாத வருவாய் ரூ. 9,454-லிருந்து ரூ. 8,591 ஆக குறைந்துள்ளது. மூலதன செலவைக் குறைப்பதாக மத்திய நிதி மந்திரி கூறுகிறார். அவர் கூறிய 4.8 சதவீத இலக்கை அவர் எவ்வாறு எட்டுவார்? மத்திய அரசின் மூலதன செலவினத்தை ரூ. 92,682 கோடி குறைத்தார். வருவாய் செலவை குறைக்கவில்லை. மூலதன செலவுக்காக மாநிலங்களுக்கு வழங்கும் மானியத்தை அவர் குறைத்துள்ளார். இது ஒரு சிறந்த பொருளாதாரம் எனக் கூற முடியாது. இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார்.