தவெகவில் இருப்பதே குழந்தைகள் மட்டும்தானேண்ணா: அண்ணாமலை!

தமிழக வெற்றிக் கழகத்தில் குழந்தைகள் அணி தொடங்கப்பட்டிருப்பது பற்றிய கேள்விக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கிண்டலாக பதில் அளித்துள்ளார்.

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டு அண்மையில் ஓராண்டை நிறைவு செய்தது. 2026 சட்டமன்ற தேர்தலை குறி வைத்து கட்சியின் நிர்வாகிகளையும், மாவட்ட பொறுப்பாளர்களையும் நியமித்து கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தி வருகிறார். இந்நிலையில், தற்போது தவெக கட்சி உருவாக்கியுள்ள அணிகளுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தவெக கட்சியின் 28 அணிகள் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தவெகவின் ஐடிவிங் சமூக வலைதள பக்கத்தில் வெளியாகியிருக்கும் பதிவில், “தமிழக வெற்றிக் கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள 28 அணிகள் குறித்த பட்டியல் வெளியீடு. மூன்றாம் பாலினத்தவர், காலநிலை மாற்றம், தகவல் சரிபார்ப்பு, இளைஞர் அணி, குழந்தைகள் அணி உள்ளிட்ட அணிகள் இடம்பெற்றுள்ளன” என பதிவிடப்படுள்ளது.

இதுவரை எந்த அரசியல் கட்சியிலும் இல்லாத ஒரு அணியாக குழந்தைகள் அணியை அமைக்க தவெக திட்டமிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேசியக் கட்சிகளில் தொடங்கி மாநில கட்சிகள் வரை யாருக்கும் தோன்றாத திட்டம் நடிகர் விஜய்க்கு தோன்றியிருப்பதாக விமர்சனமும் எழத் தொடங்கியுள்ளது. 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை தேர்தல் பணிக்காகவோ, பிரச்சாரத்திற்காகவோ பயன்படுத்தக் கூடாது என தேர்தல் ஆணையமே உத்தரவிட்டிருக்கும் நிலையில் குழந்தைகள் அணியை எப்படி அமைக்கலாம்? என்ற கேள்வியும் பரவலாக எழுந்துள்ளது. இருப்பினும், இந்த குழந்தைகள் அணி எந்த நோக்கத்திற்காக அமைக்கப்பட இருக்கிறது ? அந்த அணியின் செயல்பாடுகள் எப்படி இருக்கும்? என்ற விவரங்கள் எதுவும் தவெகவின் சட்டவிதிகளில் இடம்பெறாத நிலையில், அது தொடர்பான விரிவான விளக்கத்தை கட்சித்தலைமை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இதுகுறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. பழனியில் நேற்று (பிப்ரவரி 11) செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “அரசியல் கட்சிகளில் குழந்தைகள் சேரக்கூடாது. 18 வயதுக்கு உட்பட்டவர்களை அரசியல் கட்சிகள் பயன்படுத்தக்கூடாது. அதற்கு ஒரு நண்பர் சொன்னார், “தவெகவில் இருப்பதே குழந்தைகள் தானே?” என்று. குழந்தைகள் அணி பிரிவு ஏன் ஆரம்பித்துள்ளனர் என்பது அவர்களுக்குத்தான் வெளிச்சம். 18 வயதுக்கு உட்பட்டவர்களை அரசியலில் பயன்படுத்தக்கூடாது என்று சட்டம் சொல்லும்போது, கட்சியின் குழந்தைகள் பிரிவில் யாரை பயன்படுத்துவார்கள்? பொறுப்பு கொடுப்பார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. அதற்கு அந்தக் கட்சி தான் பதில் சொல்லவேண்டும்” எனத் தெரிவித்தார்.

முன்னதாக தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவிலில் நேற்று தைப்பூச விழா கொண்டாடப்பட்ட நிலையில், தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை நேற்று இரவு காரில் பழனிக்கு வந்தார். பின்னர் அடிவாரத்தில் இருந்து மயில் காவடி எடுத்து திருஆவினன்குடி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதன்பிறகு அருள்ஜோதி வீதி வழியாக காவடி எடுத்தபடி பாதவிநாயகர் கோவில் படிப்பாதையை வந்தடைந்தார்.

தைப்பூசத்தையொட்டி தற்போது அந்த பாதை, ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. அதாவது மலைக்கோவிலில் சாமிதரிசனம் முடிந்து பக்தர்கள் வெளியேறுவதற்காக, அந்த பாதை அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால் வெளியேறும் பாதை வழியாக அண்ணாமலை மற்றும் அவரது கட்சியினர் செல்ல முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், இது பக்தர்கள் வெளியேறும் பாதை என்றும், குடமுழுக்கு அரங்கு வழியாக செல்லுமாறும் அறிவுறுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் அண்ணாமலை மற்றும் கட்சியினர் அந்த பாதை வழியாகவே மலைக்கோவிலுக்கு சென்றனர். பின்னர் சாமி தரிசனத்தை முடித்த அண்ணாமலை மற்றும் கட்சி நிர்வாகிகள் மீண்டும் படிப்பாதை வழியாக இறங்கி அடிவாரத்துக்கு வந்தடைந்தனர்.