பிரதமர் நரேந்திர மோடியின் விமானத்தை வெடிகுண்டு வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தவுள்ளதாக மும்பை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று செவ்வாய்க்கிழமை மிரட்டல் வந்துள்ளது.
மேலும், அமெரிக்க பயங்கரவாதிகள் இந்த சதித்திட்டத்தை தீட்டியுள்ளதாகவும், கடந்த மாதங்களில் 6 அமெரிக்க விமானங்கள் வெடித்ததற்கு காரணமானவர்கள் இந்த திட்டத்தின் பின்னணியில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு அரசுமுறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி தில்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றார். இந்த நிலையில், பிரதமரின் விமானத்தை வெடிகுண்டு வைத்து அமெரிக்க பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தவுள்ளதாக மும்பை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு செவ்வாய்க்கிழமை ஒரு அழைப்பு வந்துள்ளது. உடனடியாக மிரட்டல் குறித்து பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு, தில்லியில் இருந்து விமானம் புறப்படுவதற்கு முன்னதாக தீவிர சோதனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி விமானம் மூலம் பிரான்ஸ் நாட்டுக்கு நேற்றிரவு சென்றடைந்தார். அங்கு தனது பயணத்தை முடித்துக் கொண்டு இன்றிரவு அமெரிக்காவுக்கு புறப்படவுள்ளார்.
இந்த அழைப்பு குறித்து மும்பை போலீசார் நடத்திய விசாரணையில், அதே நபர் இதுவரை 1,400 முறை மிரட்டல் விடுத்திருப்பதாக தெரிவித்துள்ளனர். லஷ்கர்-இ-தொய்பாவின் தலைமை நிர்வாக அதிகாரி என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் அந்த நபர், தொடர்ந்து இதுபோன்ற மிரட்டல்களை கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு விடுத்து வருகிறார். இவரை தேடும் பணியில் மும்பை காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
சமீபகாலமாக இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டல் அதிகளவில் வருகின்றன. உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், நடிகர்கள் ஷாருக்கான், சல்மான் கான் உள்ளிட்டோருக்கும் அடிக்கடி மிரட்டல் விடுக்கப்படுகிறது. கடந்தாண்டு மட்டும் 200 க்கும் அதிகமான விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.