எல்லா தேர்தலிலும் டெபாசிட் இழப்பது தான் தேர்தல் வியூகமா?: தமிழக வெற்றிக் கழகம்!

பிரசாந்த் கிஷோரை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சந்தித்தது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதற்கு, ஒவ்வொரு தேர்தலிலும் கட்டுத்தொகையை இழப்பதையே தேர்தல் வியூகமாகக் கொண்டவர் சீமான் என விமர்சித்துள்ளார் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு இணை செயலாளர் சம்பத்குமார்.

தமிழக வெற்றி கழகத்தை ஆரம்பித்துள்ள நடிகர் விஜய் ஏற்கனவே ஜான் ஆரோக்யசாமி, ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட தேர்தல் வியூக நிபுணர்களை கட்சியில் இணைத்திருக்கிறார். இந்த நிலையில் பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோரையும் அவர் சந்தித்தார். 2026 சட்டமன்றத் தேர்தலில் பிரசாந்த் கிஷோர் பல்வேறு வியூகங்களை தமிழக வெற்றி கழகத்திற்கு வகுத்துக் கொடுப்பார் என கூறப்படுகிறது. அவரது நிறுவனத்தில் இருந்து வெளியேறி விட்டாலும் தனிப்பட்ட முறையில் விஜய்யுடன் இணைந்து அவர் பணியாற்றுவார் எனவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இதனை விமர்சித்து இருந்தார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான். இது தொடர்பாக பேசிய அவர், “தேர்தல் வியூக வகுப்புகளில் எனக்கு உடன்பாடு இல்லை. சமூகத்தைப் பற்றி தெரியாதவர்களை அரசியல் கட்சித் தலைவர்கள் அழைக்கிறார்கள். பணக் கொழுப்பு கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பணக் கொழுப்பு அதிகமாக இருந்தால் இதெல்லாம் தேவைப்படும்” என விமர்சித்து இருந்தார். இதையடுத்து சீமானுக்கு தமிழக வெற்றிக் கழகத்தினர் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதனால் நாம் தமிழர் – தமிழக வெற்றிக்கழகத்தினர் இடையே சமூக வலைதளங்களில் மோதல் வெடித்துள்ளது.

இந்நிலையில், ஒவ்வொரு தேர்தலிலும் கட்டுத்தொகையை இழப்பதையே தேர்தல் வியூகமாகக் கொண்டவர் சீமான் என விமர்சித்துள்ளார் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு இணை செயலாளர் சம்பத்குமார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

ஊடகவியலாளர்கள் ஒலிவாங்கியை நீட்டிவிட்டால் அண்ணன் சீமான் எதையாவது உளருவதையே வழக்கமாகக் கொண்டுள்ளார். சமகால சமூகச் சூழலில் அரசியல் கட்சிகள் தேர்தல் வியூக வடிவமைப்பாளர்களை நியமிப்பதன் அவசியத்தை புரிந்துகொள்ளாமல் பணக் கொழுப்பு என்று பகிரங்கமாக அறிவித்துள்ள அண்ணன் சீமானுக்கு நடைமுறை அரசியல் யதார்த்தம் புரியவில்லை என்று தான் அர்த்தமாகிறது.

ஒவ்வொரு தேர்தலிலும் கட்டுத்தொகையை இழப்பதையே தேர்தல் வியூகமாகக் கொண்ட அண்ணன் சீமான் இன்னும் எத்தனை ஆண்டுகள் “வென்றால் மகிழ்ச்சி, தோற்றால் பயிற்சி” என்று நாம் தமிழர் உறவுகளை உசுப்பேத்திக் கொண்டே இருக்கப் போகிறாரோ தெரியவில்லை? திரள் நிதி வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ள அண்ணன் சீமானுக்கு திறமையாளர்களின் ஆலோசனைகளை பெறுவது தவறாக தெரிவது ஆச்சரியமன்று.

அண்ணே, நாங்கள் சட்டமன்றத்தில் பேசுவதற்காக அரசியல் செய்கிறோம், நீங்கள் பட்டிமன்றத்தில் பேசுவது தான் அரசியல் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். நாங்கள் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெறுவது எப்படி என்று சிந்திக்கிறோம், நீங்கள் தமிழ்தேசிய அரசியலை எப்படி வெற்றி பெறாமல் வைத்திருப்பது என்று சிந்திக்கிறீர்கள். பிரபாகரனிசத்தை முன்வைத்து கட்சி தொடங்கிய நீங்கள் இப்போது சீமானிசத்தில் கொண்டு போய் கட்சியை நிறுத்தியிருக்கிறீர்கள். ஒன்று சொல்லட்டுமா அண்ணே, எங்கள் தலைவர் தளபதி விஜய் தன் ரசிகர்களை அரசியல் கட்சியின் தொண்டர்களாக உருமாற்றம், செய்து வருகிறார். நீங்கள் உங்கள் கட்சியின் தொண்டர்களை உங்கள் ரசிகர்களாக உருமாற்றம் செய்து வருகிறீர்கள். உங்களோடு என்றும் எங்களுக்கு ஒத்து போகாது அண்ணே! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.