ஒவ்வொரு முறையும் தில்லி செல்லும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக பள்ளி மாணவர்களுக்கு நிதி பெற்றுத் தரலாமே என அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தில்லிக்கு அடிக்கடி செல்கிறார். ஒவ்வொரு முறையும் தில்லி செல்லும் அண்ணாமலை தமிழகத்தின் 40 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த திட்டத்தில் நிதி பெற்றுத் தரலாமே.
பள்ளிக்கல்வித்துறை தொடர்பாக ஆளுநர், அண்ணாமலை அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். தமிழக அரசும் 10 லட்சம் மாணவர்களின் அறிக்கையை வெளியிட முடியும். பாலியல் ரீதியான குற்றங்களில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் பட்டியல் உள்ளது. அதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் கூட்டத்தில் விவாதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறைக்கு மத்திய அரசின் சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய நிதியில் முதல் தவணைகூட இன்றுவரை விடுவிக்கப்படவில்லை என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியிருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ‘பி.எம். ஸ்ரீ திட்டத்தில் இணைவோம் என்று உறுதியளித்து விட்டு, அதில் இணையாமல், அந்தத் திட்டத்துக்கான நிதியை வழங்கவில்லை என்று கூறுவதில் வெறும் அரசியலைத் தவிர வேறொன்றுமில்லை. பள்ளி மாணவர்களின் கல்வியில் எதற்கு இந்த நேர்மையற்ற அரசியல் செய்து கொண்டிருக்கிறீர்கள்? எந்த மாநிலத்துக்குமே ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி முழுமையாக வழங்கப்படாமல் இருக்கும்போது, தமிழகத்துக்கான நிதியைப் பிற மாநிலங்களுக்குக் கொடுத்து விட்டார்கள் என்று பொய் சொல்லி அரசியல் செய்ய வெட்கமாக இல்லையா?’ என்று கடுமையாகக் கூறியிருந்தார்.