பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், விஜய்க்காக பணியாற்ற இருப்பதாக பேச்சுகள் அடிபட்டு வருகின்றன. இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த திமுக எம்பி கனிமொழி, நாங்கள் உடன்பிறப்புகளை நம்பி களமிறங்குகிறோம் என கூறியுள்ளார்.
கடந்த தேர்தலில் திமுகவுக்காக பிரசாந்த் கிஷோர் பணியாற்றியிருந்த நிலையில், இந்த தேர்தலில் விஜய் பக்கம் அவர் சாய்ந்திருப்பது விவாதங்களை கிளப்பியுள்ளது.
விழுப்புரத்தில் விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.கழக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி சார்பில் இன்று ஒருங்கிணைக்கப்பட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கனிமொழி எம்பி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியிருந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். குறிப்பாக பிரசாந்த் கிஷோர் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “பிரசாந்த் கிஷோர் தொழில்முறை வியூக வகுப்பாளர். திராவிட முன்னேற்ற கழகம், கழக உடன்பிறப்புகளை நம்பித்தான் தேர்தலை சந்திக்கிறது. முதலமைச்சர் எந்த வழியை காட்டுகிறாரோ, அந்த வழியிலே செயல்பட இங்கே இருக்கக்கூடிய திராவிட முன்னேற்ற கழக தலைவர்களும் தொண்டர்களும் தயாராக இருக்கிறார்கள். அதனால் எங்களுக்கு எந்த வித சிக்கலும் கிடையாது” என்று கூறியுள்ளார்.
அதேபோல கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை குறித்த கேள்விக்கு, “குற்றங்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனா நிச்சயமா இன்னும் விழிப்புணர்வும், சமூக மாற்றமும் ரொம்ப முக்கியமான ஒரு விஷயம். பள்ளிக்கூடம் என்பது குழந்தைகளுக்கு பாதுகாப்பான இடமாக இருக்க வேண்டும். அங்கே பணியாற்றக்கூடிய ஆசிரியர்கள் இப்படி நடந்து கொள்வது மனதை பதற வைக்கிறது. குற்றவாளிகள் மீது எந்த பாராபட்சமும் பார்க்கப்படுவது கிடையாது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்கான கடுமையான சட்டங்கள் குறித்து சட்டமன்றத்தில் முதலமைச்சர் திருத்தங்களை கொண்டு வந்திருக்கிறார் என்றார்.
அதேபோல ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் முடிவுகள் மற்றும் சீமான் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “மக்கள் சரியான பாடத்தை சொல்லிக் கொடுத்து விட்டார்கள். அதுக்கு அப்புறமும் பாடம் கத்துக்கலைன்னா இன்னும் பெரிய பாடங்களை சொல்லித் தருவார்கள்” என்று கூறியுள்ளார்.