நாங்கள் தொடர்ந்து அதிமுக கூட்டணியில் தான் உள்ளோம்: பிரேமலதா!

அதிமுகவுடன் கூட்டணி அமைத்தபோதே தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் உறுதியாகிவிட்டதாக அந்த கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். அதோடு வேட்பாளர் யார்? என்பது பற்றிய கேள்விக்கும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

தேமுதிகவின் கட்சி கொடி கடந்த 2000ம் ஆண்டில் விஜயகாந்த் ஏற்றி வைத்து அறிமுகம் செய்தார். இந்நிலையில் தேமுதிக கட்சியின் வெள்ளி விழா 25ம் ஆண்டு கொடி நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் நடந்த விழாவில் தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்று கட்சி கொடியை ஏற்றி வைத்தார். அதன்பிறகு அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். இந்த வேளையில் அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா சீட்டுக்கான தேர்தல், அதிமுகவின் உள்கட்சி விவகாரங்கள் பற்றியும், தேர்தல் கூட்டணி தொடர்பாகவும் கேள்விகள் எழுப்பப்பட்டது. விஜய் கட்சி தொடங்கி உள்ளதால் தவெகவுடன் கூட்டணியா? என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விகளுக்கு பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது:-

அதிமுக உடன் கூட்டணி அமைந்தபோதே தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் உறுதியாகிவிட்டது. ராஜ்யசபா தேர்தல் வரும்போது வேட்பாளரை அறிவிப்போம். அதிமுக உட்கட்சி விவகாரம் பற்றி கருத்து கூற விரும்பவில்லை. நாங்கள் தொடர்ந்து அதிமுக கூட்டணியில் தான் உள்ளோம்” என்று கூறினார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் வழங்கப்பட்டது. அதேபோல் ஒரு ராஜ்யசபா சீட் வழங்கப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் உள்பட அனைத்து தேமுதிக வேட்பாளர்களும் தோல்வியடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்பிக்களின் பதவிக்காலம் விரைவில் முடிவுக்கு வர உள்ளது. அதன்படி திமுக கூட்டணியில் ராஜ்யசபா எம்பிக்களாக உள்ள மதிமுகவின் வைகோ, திமுகவின் அப்துல்லா, வில்சன், சண்முகம், அதிமுகவின் சந்திரசேகரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இந்த 6 இடங்களுக்கு ஜுலை மாதம் நடைபெற வாய்ப்புள்ளது. இதில் ஒரு சீட் அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு வழங்கப்பட உள்ளது. இதனால் அதிமுக கூட்டணியில் தேமுதிகவின் வேட்பாளர் யார்? என்ற பெரும் எதிர்பார்ப்பு என்பது ஏற்பட்டுள்ளது. அநேகமாக தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்த் அல்லது அவரது மகன் விஜயபிரபாகரன் அல்லது தம்பி சுதீஷ் ஆகியோரில் ஒருவர் அதிமுக எம்எல்ஏக்களின் உதவியுடன் ராஜ்யசபா எம்பியாகலாம் என்று சொல்லப்படுகிறது.

பிரேமலதா விஜயகாந்த் மேலும் கூறியுள்ளதாவது:-

அதிமுகவில் உட்கட்சி பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறது. அதைப் பற்றி தேமுதிக சார்பில் எனது கருத்துகளைக் கூற விரும்பவில்லை. இது அவர்களுடைய கருத்து. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவருடைய கருத்தை கூறுகிறார். இதில் உண்மை பொய்யை அதிமுகவிடம் தான் கேட்க வேண்டும். தேமுதிகவுக்கு இதில் எந்த பதிலும் இல்லை. 2026 சட்டப் பேரவைத் தேர்தல் ரொம்ப ஹாட்டாக இருக்கும். எங்களுடைய கூட்டணி சக்சஸான ஆண்டாக இருக்கும். 2026 இல் நிச்சயமாக தேமுதிக இருக்கும். எங்கள் கூட்டணி மகத்தான வெற்றி பெற்று மக்களாட்சி மற்றும் கேப்டனின் கனவு, லட்சியத்தை மீட்டெடுப்போம். எப்போதும் சொல்வது போல 234 தொகுதிகளில் எங்கள் கூட்டணி வெற்றி பெறும்.

தமிழ்நாட்டில் முதலமைச்சர் மருந்தகங்கள் வரவேற்கத்தக்கது. இதே திட்டத்தை மத்திய அரசு சார்பிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஜெயலலிதா இருந்தபோதும் இதே திட்டம் இருந்தது. அதனைப் பின்பற்றி திமுகவும் தற்போது அறிவித்துள்ளது. ஆனால், இது மிகவும் காலதாமதம். இன்னும் இந்த ஆட்சி காலாவதியாக பத்து மாதங்கள் மட்டுமே உள்ளன. பதவிக்கு வந்து இத்தனை ஆண்டுகள் அமைதியாக இருந்துவிட்டு இப்போது இந்த திட்டத்தை அறிவிக்கின்றன. தேர்தலுக்காகத்தான் இத்திட்டத்தை அறிவிக்கின்றனர். உண்மையிலேயே மக்களுக்கான திட்டமாக இருந்தால் வெற்றி பெற்று வந்த உடனேயே இத்திட்டத்தை அறிவித்திருக்க வேண்டும். இன்னும் பத்து மாதங்கள் தான் அடுத்த தேர்தலுக்கு உள்ள நிலையில் இப்போது வந்து இத்திட்டத்தை அறிவித்திருப்பது வெறும் கண்துடைப்பு. விஜய் அரசியலுக்கு எடுபடுவாரா இல்லை என்று நான் ஜோசியமாக சொல்ல முடியாது. அவருடைய அடுத்தகட்ட நடவடிக்கை செயல்பாட்டைப் பொறுத்துதான் அதனை முடிவு செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.