பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தன்னை எம்எல்ஏ-வாக நிலை நிறுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும் என்று அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார். திமுகவை அழிப்பேன் என்று கூறியவர்கள் அடங்கி மண்ணோடு மண்ணாக போனார்கள் என்று கூறிய சேகர்பாபு, அண்ணாமலை எந்த தொகுதியில் நின்றாலும் அவரை புறமுதுகிட்டு ஓட வைப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில், பாஜக தலைவராக தொடர முடியாது என்று எனக்கு நன்றாக தெரியும். பாஜகவை பொறுத்தவரை ஒருவரே தலைவர் பதவியில் இருக்க முடியாது. ஆனால் நான் இங்கு இருந்து செல்லும் போது அண்ணா அறிவாலயத்தில் உள்ள ஒவ்வொரு செங்கல்லையும் எடுக்காமல் விட மாட்டேன். திமுகவின் ஊழல் அமைச்சர்கள் 35 பேரும் சிறைக்கு செல்வதை பார்க்க நான் இங்கு இருப்பேன். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம் என்று தெரிவித்தார்.
அண்ணாமலையின் பேச்சு திமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் சேகர்பாபு அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது:-
அறிவாலயத்தை அசைத்து பார்க்க வேண்டும் என்று நினைத்தவர்கள், அடங்கி மண்ணோடு மண்ணாக போனார்கள் என்பதுதான் வரலாறு. எப்போதெல்லாம் திமுகவை அழிக்க வேண்டும் என்று புறப்படுகிறார்களோ, எப்போது திமுகவை அழிப்பேன் என்று கூறுகிறார்களோ, அதுதான் அவர்களின் அழிவுக்கு தொடக்க புள்ளி. திமுக பொறுத்தவரை தொண்டன் முதல் 2ஆம் கட்ட தலைவர் வரை உணர்வால் பின்னிப் பிணைந்தவர்கள். தமிழ்நாட்டில் பிறந்து, வளர்ந்து அரசியலை கரைத்து குடித்தவர்கள். அவரை போல் இறக்குமதி செய்யப்பட்டவர்கள் அல்ல திமுக தொண்டர்கள்.
திமுகவின் ஆலயமாக கருதப்படும் அறிவாலயத்தை தொட்டு கூட பார்க்க முடியாதவர், எப்படி செங்கலை பிடுங்க முடியும். 75 ஆண்டுகள் கடந்த திமுகவை அசைத்து பார்க்க, இன்னொரு பிறந்துதான் வர வேண்டும். பாஜகவின் ஆணவப் பேச்சுக்கு தமிழக மக்கள் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் திமுகவை ஆட்சியில் அமர வைப்பார்கள். 2026 சட்டமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று ஒரு சட்டமன்ற உறுப்பினராக தன்னை நிலைநிறுத்தி கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் எந்த தொகுதியில் அண்ணாமலை நின்றாலும், அவரை புறமுதுகிட்டு ஓடச் செய்வதற்கு திமுகவின் அடிப்படை உறுப்பினரை நிறுத்தி மண்ணை கவ்வ வைப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.