செஞ்சிலுவை சங்கத்தில் மாணவர்களை சேர்க்க ஏற்பாடு: ஆளுநர் ஆர்.என்.ரவி!

கல்லூரி மாணவர்களை செஞ்சிலுவை சங்கத்தில் சேர்க்க ஏற்பாடு செய்யப்படும் என்று இந்திய செஞ்சிலுவை சங்க தமிழ்நாடு கிளையின் தலைவரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி கூறினார்.

சென்னை எழும்பூரில் உள்ள இந்திய செஞ்சிலுவை சங்க தமிழ்நாடு கிளை அலுவலக வளாகத்தில் மகாத்மா காந்தி சிலை நிறுவப்பட்டுள்ளது. இச்சிலையை தமிழக ஆளுநரும், இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தமிழ்நாடு கிளை தலைவருமான ஆர்.என்.ரவி திறந்துவைத்து பேசியதாவது:-

மனித சமூகத்துக்கு சேவை செய்வது என்பதுதான் செஞ்சிலுவை சங்கத்தின் தலையாய நோக்கம். அந்த வகையில் செஞ்சிலுவை சங்கத்தில் உள்ளவர்கள் போர் காலங்களிலும், இயற்கை சீற்றங்களின்போதும் பாதிக்கப்படும் மக்களுக்கு அளப்பரிய வகையில் சேவை செய்து வருகின்றனர். மற்றவர்களுக்கு சேவை செய்வது என்பது இந்தியர்களின் மரபணுவில் உள்ளது. இந்தியாவின் பாரம்பரியம் பிறருக்கு சேவை ஆற்றுவதுதான்.

தமிழகத்தில் 60 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயர்கல்வி பயில்கின்றனர். எனவே, செஞ்சிலுவை சங்கத்தில் கல்லூரி மாணவர்களையும் சேர்க்க வேண்டியது அவசியம். அந்த வகையில் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் பல்கலைக்கழக துணைவேந்தர்களுடான மாநாட்டில் இதுகுறித்து ஆலோசிக்கப்படும். மாறி வரும் இன்றைய சூழலுக்கு ஏற்ப செஞ்சிலுவை சங்கத்தினர் தங்களின் வழக்கமான பணிகளுடன் புதிய பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

தற்போது சமூக, பொருளாதார நெருக்கடி காரணமாக தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரையில் ஆண்டுக்கு ஏறத்தாழ 20 ஆயிரம் பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள் என்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. இத்தகைய சூழலில் சமூக, பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாவோருக்கு உளவியல் ஆலோசனை போன்ற பணிகளையும் செய்யும் வண்ணம் செஞ்சிலுவை சங்கத்தினர் தங்கள் பணிகளையும் மாற்றியமைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு ஆளுநர் பேசினார்.

செஞ்சிலுவை சங்க நிர்வாகிகளும், வினாடி-வினா, நாடகம் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற செஞ்சிலுவை சங்க மாணவ, மாணவிகளுக்கும் ஆளுநர் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். முன்னதாக, இந்திய செஞ்சிலுவை சங்க தமிழ்நாடு கிளை துணை தலைவரான நீதிபதி எம்.ஜெயச்சந்திரன் வரவேற்று பேசும்போது, “உலகத்திலேயே மிகப்பெரிய சேவை அமைப்பு செஞ்சிலுவை சங்கம்தான். நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்யும் வகையில் செஞ்சிலுவை சங்க தமிழ்நாடு கிளையின் நிர்வாகத்தையும், கணக்குகளையும் டிஜிட்டல்மயமாக்கி இருக்கிறோம்” என்றார்.