திமுக வெளியிட்டுள்ள தேர்தல் வாக்குறுதிகளில் நிறைவேற்றப்பட்டவை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தேர்தல் வாக்குறுதிகளில் 98 சதவிகித வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாகக் கூறுகிறார்கள். 505 வாக்குறுதிகளில் 328 வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக முதல்வர் பொய் சொல்கிறார். தமிழகத்தில் காலியாக உள்ள 3.5 லட்சம் வேலைவாய்ப்புகள் நிறைவேற்றப்படும். மாணவர்களின் கல்விக்கடன், நீட் தேர்வு ரத்து செய்யப்படும். 50 லட்சம் மாணவர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும். மாதம் ஒருமுறை மின் கணக்கீடு செய்யப்படும். சட்டப்பேரவை ஆண்டுக்கு 100 நாட்கள் நடத்தப்பட்டு அவை நேரலை செய்யப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. எனவே இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
ஆந்திராவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடித்த பின் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 13 சதவீதம் உயர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. தெலங்கானாவில், இட ஒதுக்கீட்டு அளவை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த இடதுக்கீடு 66 சதவீதமாக உயரும். இதற்கான சட்ட முன் வரைவு வரும் மார்ச் மாதம் கொண்டுவர உள்ளதாக அம்மாநில துணை முதல்வர் தெரிவித்துள்ளார். இனியாவது தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முன்வர வேண்டும்.
புதிய கல்விக் கொள்கையின் ஒரு அங்கமான பிஎன்சி பள்ளியைத் திறக்க தமிழக அரசு மறுத்துவிட்டதால் ரூ 2151 கோடி தொகையை மத்திய அரசு வழங்க மறுத்துவிட்டது. தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்கிட வேண்டி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க வேண்டும். காவிரி- கோதாவரி இணைப்பு திட்டத்தில் கருத்தொற்றுமை ஏற்படக் கூட்டம் நடத்த வேண்டும். கோதாவரி ஆற்றிலிருந்து 1100 டி எம் சி தண்ணீர் கடலில் கலக்கிறது. இத்திட்டம் நிறைவேறினால் தமிழகத்திற்கு 200 டி எம்.சி தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளது. காவிரி பாசன மாவட்டங்களில் அறுவடை தீவிரமடைந்துள்ளது. அரசு நிர்வாகம் திட்டமிட்டு அறுவடை இயந்திர தட்டுப்பாட்டை நீக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழ்நாடு மின்வாரியத்தில் காலியாக உள்ள 39 ஆயிரத்து 393 களப்பணியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இரண்டாம் நிலை காவலர்கள் 7 ஆண்டுகளில் முதல்நிலை காவலர்களாகவும் 10 ஆண்டுகளில் தலைமைக் காவலராகவும், 20 ஆண்டுகளில் சிறப்புக் காவல் ஆய்வாளராகப் பதவி உயர்வு அளிக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். அடுத்த நிதி நிலை அறிக்கையில் பதவி உயர்வு குறித்து அறிவிப்பு வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.