எச்.ராஜா மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி ஐகோர்ட் கிளையில் மனு!

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

மதுரை கே.கே நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், “கடந்த 4ஆம் தேதி இந்து முன்னணி அமைப்பின் சார்பில் திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வலியுறுத்தி, பழங்காநத்தம் பகுதியில் போராட்டம் நடைபெற்றது. இதற்கு நீதிமன்றம் சில நிபந்தனைகளை விதித்து அனுமதி வழங்கியது. இந்த போராட்டத்தின்போது பேசிய பாஜக தலைவர் எச்.ராஜா இந்து, இஸ்லாமிய மக்களின் ஒற்றுமைக்கு எதிரான வெறுப்பை தூண்டும் வகையிலான கருத்துக்களை பேசினார். அதோடு தமிழக அரசு தாலிபான் தீவிரவாதியினரால் தேர்வு செய்யப்பட்ட அரசு என பேசினார். மேலும் திருப்பரங்குன்றம் விவகாரத்தை அயோத்தி பிரச்சனை போல் உருவாக்கும் வகையில் அவரது கருத்துக்கள் இருந்தன. பிற மதத்தை பின்பற்றும் மக்கள், அரசியல்வாதிகளின் மத நம்பிக்கை குறித்து, வெறுப்பை தூண்டும் வகையிலான கருத்துக்களை அரசியல் ஆதாயத்திற்காக தெரிவிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். பின்னர் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும்போது, நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி தப்பிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இது தொடர்பாக அவர் மீது ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்படவோ, இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுகளை நிறுத்தவோ அவர் தயாராக இல்லை.

பிப்ரவரி 4ஆம் தேதி பழங்காநத்ததில் வெறுப்பை தூண்டும் வகையில் பேசிய எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்து, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரி சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே எனது மனுவின் அடிப்படையில் தமிழகத்தில் மத நல்லிணக்கத்தை குலைத்து, பிரிவினை ஏற்படுத்தும் வகையில் பேசிய எச் ராஜா மீது வழக்கு பதிவு

இந்த வழக்கு நீதிபதி தனபால், முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் மகேந்திரபதி, ரமேஷ் குமார் ஆகியோர் ஆஜராகி பாஜக பிரமுகர் எச்.ராஜா, தமிழக அரசுக்கு எதிராக தாலிபன் அரசு என பேசி வருகிறார். மத மோதல்களை உருவாக்கும் வகையில் பேசி உள்ளார். நீதிமன்றம் பல நிபந்தனைகளை விதித்து தான் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கியது. ஆனால் நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்டுள்ளார். எனவே எங்கள் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் அன்பு நிதி ஆஜராகி, எச்.ராஜா மீது BNS 192,196 (1ab),352,353(1ab) போன்ற பிரிவுகளில் கலவரத்தை ஏற்படுத்துதல், மத நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் செயல்படுதல், பொது அமைதியை குந்தகம் விளைவித்தல், ஒரு பிரிவினருக்கு எதிராக அச்சத்தை ஏற்படுத்து வகையில் பேசுதல் போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறி முதல் தகவல் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

அப்போது மனுதாரர் தரப்பில் நாங்கள் கொடுத்த புகாரின் படி உரிய பிரிவுகளில் வழக்கு தாக்கல் செய்யவில்லை பொதுவாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர். அப்போது நீதிபதி, மனுதாரர் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கையில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் கோரிக்கைகள் இருந்தால் அது குறித்து மீண்டும் நீதிமன்றத்தை அணுகலாம் எனக் கூறி காவல்துறை தரப்பில் மனுதாரருக்கு முதல் தகவல் அறிக்கையை கொடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.