தமிழ்நாடு அமைச்சரவையில் திடீர் மாற்றம்!

தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ராஜகண்ணப்பன் துறைகள் பொன்முடிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. பால் வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனிடம் இருந்த காதி, கிராம தொழில்கள் இலாகா, அமைச்சர் பொன்முடிக்கு மாற்றப்பட்டு உள்ளது. வனத்துறையுடன் சேர்த்து காதி, கிராம தொழில்கள் இலாக்காவையும் அமைச்சர் பொன்முடி கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மாண்புமிகு முதலமைச்சரின் பரிந்துரையின் அடிப்படையில், பால் மற்றும் பால் வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் வகித்து வந்த “காதி & கிராமத் தொழில் வாரியம்” இலாகா, டாக்டர் கே.பொன்முடிக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது, வனம் மற்றும் காதி துறை அமைச்சராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டில் திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து தமிழக அமைச்சரவையில் உயர்கல்வித்துறை அமைச்சராக பொன்முடி இருந்தார். சொத்துக்குவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய சிறை தண்டனை காரணமாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தனது அமைச்சர் பதவி மற்றும் எம்.எல்.ஏ பதவியை பொன்முடி இழந்தார். இதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கில் பொன்முடிக்கும் அவரது மனைவிக்கும் விதிக்கப்பட்ட சிறை தண்டனை மற்றும் அபராதத்தை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. இதனால் காலியானதாக அறிவிக்கப்பட்ட திருக்கோவிலூர் தொகுதிக்கான அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டதுடன், மீண்டும் எம்.எல்.ஏ ஆனார்.

கடந்த ஆண்டு மார்ச் 22ஆம் தேதி அன்று கிண்டி ராஜ்பவனில் பொன்முடிக்கு அமைச்சராக ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் பதவி பிரமாணம் செய்து வைத்தார். ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் – அமைச்சர் பொன்முடிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் தொடர்ந்து வந்தது. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதத்தில் பொன்முடியிடம் இருந்த உயர்கல்வித்துறை கோவி செழியனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. மதிவேந்தனிடம் இருந்த வனத்துறை பொன்முடிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

2021ஆம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற போது ராஜகண்ணப்பனுக்கு போக்குவரத்து துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. பட்டியலின சமூகத்தை சேர்ந்த அதிகாரி ஒருவரை அவதூறாக பேசியதாக எழுந்த புகாரில் அவரது இலாகா மாற்றப்பட்டு பிற்படுத்தபட்டோர் நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.

சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடியின் அமைச்சர் பதவி பறிபோனபோது உயர்கல்வித்துறை கூடுதலாக ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அடுத்து நடந்த அமைச்சரவை மாற்றத்தின் போது மனோ தங்கராஜ் வசம் இருந்த பால் வளத்துறை மற்றும் காதி மற்றும் கிராமத் தொழில்கள் துறை ராஜகண்ணப்பனுக்கு மாற்றப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை இலாகா அமைச்சர் சி.வீ.மெய்யநாதனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த நிலையில் தற்போது கதர் மற்றும் கிராமத் தொழில்கள் இலாகா ராஜகண்ணப்பனிடம் இருந்து பொன்முடிக்கு வழங்கப்பட்டு உள்ளது.