தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இருவரும் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பு தொடர்பாக உதயநிதி ஸ்டாலின், அரசியல், கலை என்று பல துறை சார்ந்த கருத்துகள் பரிமாறி கொண்டதாக பதிவிட்டுள்ளார். திமுக சார்பாக மாநிலங்களவை உறுப்பினர் பதவி மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
“விக்ரம்” படத்தின் வெளியீட்டின் போது உதயநிதி ஸ்டாலின் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இடையில் நெருக்கம் ஏற்பட்டது. நட்புடன் இருந்து வந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தலின் போது கூட்டணியும் அமைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கமல்ஹாசன் இணைந்தார். அப்போது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு எந்த தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக ராஜ்ய சபா பதவி அளிப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதுகுறித்த கேள்விகள் எழுந்த போது, திமுகவுடன் கைகோர்த்தது மக்கள் நலனுக்காகவே தவிர, பதவிக்காக அல்ல என்று கமல்ஹாசன் விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில் விரைவில் தமிழகத்தில் 6 மாநிலங்களவை எம்பி-க்களின் பதவிக்காலம் முடிவடையவுள்ளது. அதில் திமுகவுக்கு 4 எம்பி-க்கள் கிடைக்கவுள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை சில நாட்களுக்கு முன் அமைச்சர் சேகர்பாபு சந்தித்தார். அப்போது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று சொல்லப்பட்டாலும், தற்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்தித்துள்ளார்.
இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர், கலைஞானி கமல்ஹாசன் சாரை இன்று அவரின் இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். அன்போடு வரவேற்று அரசியல், கலை என பல்வேறு துறைகள் சார்ந்து கருத்துக்களை பரிமாறிக்கொண்ட கமல் சாருக்கு என் அன்பும், நன்றியும் என்று பதிவிட்டுள்ளார்.
இதனால் விரைவில் மாநிலங்களவை எம்பி தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியான பின் திமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக கமல்ஹாசனின் பெயர் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து ஆலோசிக்கவே துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று கமல்ஹாசனை சந்தித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.