ஒரு எம்.பி ஆகிய எனக்கே இந்த நிலையா: தமிழச்சி தங்கப்பாண்டியன்!

டெல்லியில் இருந்து சென்னை செல்வதற்காக ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானத்தில் பிசினஸ் கிளாஸ் வகுப்பில் டிக்கெட் புக் செய்திருந்த நிலையில், எவ்வித முன் அறிவிப்பும் இன்றி, அது சாதாரண வகுப்பிற்கு தரவிறக்கம் செய்யப்பட்டிருப்பது குறித்து தென் சென்னை தொகுதி எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார். ஒரு எம்பியாகிய எனக்கே இந்த நிலையா என்று கேள்வி எழுப்பி, மத்திய விமானத்துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடுவை கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவின் சகோதரியான தமிழச்சி தங்கப்பாண்டியன், தென் சென்னை தொகுதி எம்பியாக இருக்கிறார். இவர் கடந்த 2019ம் ஆண்டில் நடந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு தென்சென்னை தொகுதியில் வென்றார். அதன் பிறகு 2024ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலிலும் தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இங்கு இவரை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜெயகுமாரின் மகன் ஜெயவர்தன், பாஜக சார்பில் போட்டியிட்ட தமிழிசை சௌந்திரராஜன் ஆகியோர் தோல்வியை தழுவினார்கள்.

தமிழச்சி தங்கப்பாண்டியனை பொறுத்தவரை எப்போதுமே சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பார். தொகுதி தொடர்பாக யாராவது டேக் செய்து பிரச்சனைகளை எழுப்பினால் பதில் அளிப்பார். அதேபோல் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியது தொடர்பாகவும், பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக கேள்விகள் எழுப்பியது தொடர்பாகவும் அடிக்கடி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். தற்போது நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் அதற்காக டெல்லி சென்று வந்தார். நேற்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தொடர்பான விவாதத்தில் தமிழச்சி தங்கப்பாண்டியன் கலந்து கொண்டு பேசினார்.

பின்னர் டெல்லியில் இருந்து சென்னைக்கு வருவதற்காக நேற்று இரவு ஏர் இந்தியா விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். அவர் பிசினஸ் கிளாஸ் டிக்கெட் முன்பதிவு செய்திருந்துள்ளார். ஆனால் எக்கனாமி கிளாஸ்க்கு தரவிறக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் இப்படி தனது பிசினஸ் கிளாஸ் விமான டிக்கெட் தரவிறக்கம் செய்யப்பட்டிருப்பதாக தமிழச்சி தங்கப்பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்பி நேற்று இரவு தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில் கூறுகையில், “இன்று (பிப்ரவரி 13) இரவு டெல்லியில் இருந்து சென்னை செல்வதற்காக ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானத்தில் பிசினஸ் கிளாஸ் வகுப்பில் நான் டிக்கெட் புக் செய்திருந்தேன். ஆனால் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி என்னுடைய பிஸினஸ் கிளாஸ் பயண வகுப்பு தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. ஒரு எம்.பி ஆகிய எனக்கே இந்த நிலை என்றால் மற்ற பயணிகளை இவர்கள் எப்படி நடத்துவார்கள் என்று என்னால் நினைத்துக்கூட பார்க்க இயலவில்லை. பயணிகளின் உரிமைகள் மற்றும் சேவைத் தரங்களில் இப்படி அலட்சியம் செய்வது அதிர்ச்சியளிக்கிறது. இத்தகைய தவறான நிர்வாகத்திற்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவை வலியுறுத்துகிறேன்’ என்று மத்திய அமைச்சரை டேக் செய்து தமிழச்சி தங்கபாண்டியன் பதிவிட்டிருந்தார். அத்துடன் சுமதி என்ற தனது இயற்பெயருடன் கூடிய விமான டிக்கெட்டையும் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.