தமிழகம் ஒருநாள் நம் கைக்கு வரும், அதுவரை தொடரந்து உழைப்போம்: வானதி சீனிவாசன்!

கோவை குண்டு வெடிப்பில் உயிரிழந்த 58 பேருக்கு 27 ஆம் ஆண்டு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியில், தமிழகம் ஒருநாள் நம் கைக்கு வரும் என்று கோவை தெற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

கோவை தொடர் குண்டு வெடிப்பில் உயிரிழந்த 58 பேருக்கு 27 ஆம் ஆண்டு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி ஆர்எஸ் புரம் தபால் நிலையம் அருகே நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் பங்கேற்று பேசியதாவது:-

27 வது ஆண்டு அஞ்சலி கூட்டத்திற்காக இங்கு சேர்ந்துள்ளோம். 27 ஆண்டுகளாக எதற்கு திரும்ப திரும்ப மக்களுக்கு இதை கூற வேண்டியது ஏன் என கேட்கின்றனர். நமது சமூகத்தை பிளக்க நினைக்கும் வரலாறை அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. இந்த கொடுஞ்செயல் மக்களுக்கு இன்னமும் ஆழமாக இருக்கின்றது. கோவையின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்திவிட்டது இந்த குண்டுவெடிப்புச் சம்பவம். உயிரிழந்தவர்கள் அனைவரும் பா.ஜ.க.வினர், இந்துத்துவா அமைப்பினர் அல்ல. மத பயங்கரவாதத்திற்கு அதிக இழப்புகளை அடைந்த கட்சி பா.ஜ.க. இந்து கலாச்சாரத்திற்கு தர்மத்திற்கு பாதிப்பு வந்தால் அதை காக்க நாங்கள் இருக்கின்றோம். இதை ஒவ்வொரு தலைமுறைக்கும் எடுத்துக் செல்லாமல் இருக்க மாட்டோம்.

பொங்கல் வைக்காத இஸ்லாமியர், கிறிஸ்தவர்களை வைத்து ஏமாற்றும் முதல்வர் இங்கு இருக்கின்றார். தமிழகத்தில் பெரும்பான்மை மக்கள் கொண்டாடும் விழாக்களுக்கு வாழ்த்து சொல்லாதவர் முதல்வர். இந்து கோவில்களுக்கும் வழிபாட்டிற்கும் ஏதாவது பிரச்சினை வந்தால் எந்த அரசியல் கட்சியும் வாயை திறப்பதில்லை. பா.ஜ.க பிரிவினை வாதத்தினை தூண்டுகின்றது என்கின்றனர். இதை வெளிநாடுகளில் யாரும் நம்ப மாட்டார்கள். நாட்டை பிரிப்பார்கள், மத கலவரம் செய்ய போகின்றனர் என பேசுகின்றனர். அரசியலில் வெற்றி பெற மத வாதத்திற்காக கையில் எடுப்பதாக சொல்கின்றனர். பா.ஜ.க பிரிவினைவாதம் செய்கின்றது என பேசும் கட்சிகள் எனது தொகுதிக்கு வாருங்கள். ஒரு சட்டமன்ற உறுப்பினரால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை காட்டுகின்றோம். சிறுபான்மை மக்களுக்கு எந்த வேறுபாடு, மாறுபாடு காட்டுவதில்லை. பா.ஜ.க மத கலவரத்திற்காக அல்ல. தமிழகமும் ஒரு நாள் நமது கைக்கு வரும். அது வரை தொடரந்து உழைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.