தமிழக அரசு அனைத்து வகையிலும் தோல்வி அடைந்துவிட்டது: தமிழிசை சவுந்தரராஜன்!

தமிழக அரசு அனைத்து வகையிலும் தோல்வி அடைந்துவிட்டது. தி.மு.க. கூட்டணியில் உள்ளவர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசு பட்ஜெட் சாமானிய மக்களுக்கான பட்ஜெட். அதை பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துரைக்கும் வகையில் பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. பட்ஜெட்டில் ரூ.12 லட்சம் வரை வரி விலக்கு அளித்திருப்பது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழக அரசு அனைத்து வகையிலும் தோல்வி அடைந்துவிட்டது. தமிழகத்தில் ஸ்டாலின் அலை வீசுகிறது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறுகிறார். ஆனால் தமிழகத்தில் பொதுமக்கள் இடையே கவலைதான் வீசுகிறது. பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லூரிகள், சாலைகள், பணி செய்யும் இடங்களில் நடக்கும் பாலியல் தொல்லை கவலையை ஏற்படுத்தி உள்ளது.

அ.தி.மு.க பிரச்சினை தேர்தல் கமிஷனுக்கு சென்றுள்ளது. அதற்கும் பா.ஜ.க.தான் காரணம் என்று செல்வப்பெருந்தகை கூறுகிறார். யார் வீட்டிலாவது சமையல் நடைபெறவில்லை என்றால் அதற்கும் பா.ஜ.க.வின் சதி என்று கூறுவார். தமிழகத்தில் இந்தியா கூட்டணிக்கு 5 சதவீதம் வாக்கு உயர்ந்துள்ளதாக கூறுகிறார்கள். 5 டிகிரி காய்ச்சல்தான் உயர்ந்துள்ளது. அதற்கு தக்க மருந்து அளிக்கப்படும். அதன் மூலம் அந்த சதவீதம் குறைந்து கொண்டே வரும்.

தி.மு.க. கூட்டணியில் உள்ளவர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது. வேங்கைவயல் பிரச்சினையில் திருமாவளவன் உள்ளூர் காவல்துறையை நம்பவில்லை. சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என கூறுகிறார். பாலியல் பிரச்சினையிலும் உள்ளூர் காவல்துறை விசாரணையை ஏற்காமல் சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும் என்கிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சியினரும், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனும் ஆட்சிக்கு எதிராக பேசி வருகிறார்கள். காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் ஆட்சியில் பங்கு வேண்டும் என்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.