நாடாளுமன்றத்தில் பெரிய கட்சிகள், சிறிய கட்சிகள் என்கிற பாகுபாடுகள் உள்ளன: திருமாவளவன்!

”நாடாளுமன்றத்தைப் பொறுத்தவரை, நாம் நினைக்கிற போதெல்லாம் எழுந்து பேசிவிட முடியாது. அதில் சில நடைமுறைகள் இருக்கின்றன. பெரிய கட்சிகள், சிறிய கட்சிகள் என்கிற பாகுபாடுகள் உள்ளன. இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கட்சி நாடாளுமன்றத்தில் ஒரு கட்சியாகவே கருதப்படாது. அதுதான் நாடாளுமன்றத்தின் விதி” என திருமாவளவன் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

புல்வாமா தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்களின் நினைவேந்தல் நிகழ்வு சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. தமிழ்நாடு முன்னாள் ஆயுத காவல் படை நல மற்றும் மறுவாழ்வு சங்கம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்டு விசிக தலைவர் திருமாவளவன் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு நன்றி பெருக்கோடு ஒவ்வொரு ஆண்டும் நீங்கள் முன்னெடுக்கிற இந்த நிகழ்வு மிகுந்த ஆறுதலை தருகிறது. இதற்கான ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரையும் நெஞ்சார பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.

புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் வாய்ப்பை நீங்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு வழங்கி இருக்கிறீர்கள். அதற்காகவும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். கடந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சியிலும் பங்கேற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது நீங்கள் வைத்த கோரிக்கைகள் அனைத்தும் இன்னமும் நிறைவேற்றப்படாத நிலை உள்ளது. இதில், மாநில அரசுக்கான கோரிக்கைகளும் இருக்கின்றன, மத்திய அரசுக்கான கோரிக்கைகளும் இருக்கின்றன.

குறிப்பாக, குடிசை மாற்று வாரியத்தில் இட ஒதுக்கீடு இல்லை, மாவட்டம் தோறும் கேன்டீன் வசதிகள் வழங்கப்படுவதில்லை, ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு உயர் கல்வியில் இட ஒதுக்கீடு இல்லை போன்ற உங்களின் 14 கோரிக்கைகளும் நியாயமானவை, ஜனநாயகப்பூர்வமானவை. நாட்டுக்காக பாடுபட்ட, உழைத்த, தியாகம் செய்த உங்களின் குடும்பத்தினரின் நலன்களுக்காக இதை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு என்போன்றோருக்கு இருக்கிறது.

தமிழ்நாடு முன்னாள் ஆயுத காவல் படை நல மற்றும் மறுவாழ்வு சங்கத்தின் கோரிக்கைகளை மார்ச் 10-ம் தேதி மீண்டும் தொடங்க உள்ள நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் கட்டாயம் எழுப்ப வேண்டும் என்று இங்கே பேசியவர்கள் வலியுறுத்தினார்கள். நாடாளுமன்றத்தைப் பொறுத்தவரை, நாம் நினைக்கிற போதெல்லாம் எழுந்து பேசிவிட முடியாது என்பதுதான் பிரச்சினை. அதில் சில நடைமுறைகள் இருக்கின்றன. பெரிய கட்சிகள், சிறிய கட்சிகள் என்கிற பாகுபாடுகள் உள்ளன. இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கட்சி நாடாளுமன்றத்தில் ஒரு கட்சியாகவே கருதப்படாது. அதுதான் நாடாளுமன்றத்தின் விதி.

5 உறுப்பினர்களைக் கொண்டிருந்தால் குருப் என்று மதிப்பீடு செய்கிறார்கள். 8 உறுப்பினர்களைக் கொண்டிருந்தால் கட்சி என்று மதிப்பீடு செய்கிறார்கள். 5 உறுப்பினர்களுக்கு கீழே இருந்தால் சுயேட்சை மாதிரிதான். உதிரிகள் என்பது போல. ஆகவே, கட்சி, குருப் ஆகியவற்றுக்குத்தான் நேரத்தை பங்கீடு செய்வார்கள். ஒரு விவாதம் நடக்கிறபோது, அந்த விவாதத்துக்கு 5 அல்லது 6 மணி நேரம் ஒதுக்கினால், அதில் ஆளும் கட்சிக்கு இத்தனை மணி நேரம், எதிர்க்கட்சிக்கு இத்தனை மணி நேரம் என்று உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரை மணி நேரம், கால் மணி நேரம் என்று ஒதுக்குவார்கள். அந்தந்த நேரத்தை அந்தந்த கட்சிக்கு ஒதுக்கீடு செய்து அறிவிப்பார்கள். அதை அவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

எங்களைப் போன்றவர்கள் இடையிலே எழுதிக் கொடுத்து, அனுமதி கேட்டு, அவர்கள் இறுதியாக ஒரு அரை மணி நேரம் வைத்து, அதில் ஆளுக்கு 2 நிமிடம் என்று 10-15 பேரை பேசவைப்பார்கள். அப்படி 2 நிமிடங்கள் கிடைக்கிற வாய்ப்பை பயன்படுத்தித்தான் நாங்கள் பேச வேண்டும். அடுத்து ஒரு துறை தொடர்பான விவாதம் வருகிறபோது, அந்த துறை தொடர்பான பிரச்சினைகளைத்தான் பேச முடியும். ஒரு துறை தொடர்பான விவாதத்தில் இன்னொரு பிரச்சினையை எழுப்ப முடியாது. எழுப்பினாலும் அது பொருத்தமாக இருக்காது.

ஜீரோ அவர் சமயத்தில் பொதுப் பிரச்சினைகளைப் பேசலாம். அதற்கு 20 பேரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுப்பார்கள். அந்த 20 பேர்தான் பேச முடியும். அந்த 20 பேருக்கும்கூட ஒரு மணி நேரத்தில் வாய்ப்பு கிடைக்குமா என்றால் கிடைக்காது. சில நேரங்களில் நேரத்தை நீட்டித்து அந்த 20 பேருக்கும் வாய்ப்புகொடுப்பார்கள். பட்ஜெட் உரை, குடியரசு தலைவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் உரை பொதுவானது. அதில் எல்லா கட்சிகளும் பேச முடியும். அத்தகைய தருணங்களில் எங்களைப் போன்ற சிறிய கட்சிகளுக்கு ஒதுக்கப்படக்கூடிய அதிகபட்ச நேரம் 5 நிமிடம். குறைந்தபட்சம் 2 நிமிடம். இதனால்தான், நாங்கள் வாக்குறுதி கொடுத்தாலும் நாடாளுமன்றத்தில் அந்த பிரச்சினைகளை எழுப்ப முடிவதில்லை. எனவே, சம்பந்தப்பட்ட அமைச்சரைப் பார்த்து கோரிக்கை விடுப்போம். எனவே, உங்கள் கோரிக்கைகளை ஒரு மனுவாக பாதுகாப்பு அமைச்சரை சந்தித்து வழங்குவேன் என்ற உறுதியை தருகிறேன்.

மாநில அரசுக்கான கோரிக்கைகளை பொறுத்தவரை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மூலமாக முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் செல்வோம் என்ற உறுதியை அளிக்கிறேன். புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் தோழர்களுக்கு விசிக சார்பில் செம்மார்ந்த வீர வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.