தவெக தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு கொடுத்தது குறித்து பேசியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, விஜய் பிரபலமான நடிகர், மக்கள் செல்வாக்கு அதிகம் உள்ளவர், இளைஞர்கள் பட்டாளம் அவருக்கு உள்ளது, எனவே அவருக்கு பாதுகாப்பு கொடுத்துள்ளனர் என கூறியுள்ளார்.
மதுரை மாவட்டம் பரவை அருகே சத்தியமூர்த்திநகர் பகுதியில் புதிய அங்கன்வாடி மைய கட்டிட திறப்பு விழா மற்றும் சந்தன மாரியம்மன் கோவில் அருகே பக்தர்களுக்கு புதிய நிழற்குடை அமைப்தற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கொண்டு, அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்ததோடு, புதிய நிழற்குடை அமைப்பதற்கான பூமி பூஜையையும் துவக்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
எங்களை பொறுத்தவரை எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே பொதுச் செயலாளர். அவர் தான் எங்களுக்கு முதலமைச்சரும் கூட.. தமிழகத்திலே வருகின்ற 2026 சட்ட மன்ற தேர்தலுக்கான பணிகளை எங்கள் கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தான் மேற்கொள்வார். அவர் வழியில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களாகிய நாங்கள் அதிமுக ஆட்சியை பிடிக்க சிறப்பாக பணியாற்றுவோம். திமுகவில் இருக்கும் பாதி பேர் அதிமுகவினர் தான். இருந்தும் மோசடி வழக்கில் விசாரணையின் அமைப்புகளின் கீழ் இருக்கும் அமைச்சருக்கு கூடுதல் பொறுப்பா? சிறையில் இருந்து ஜாமீன் மனுவில் வந்தவருக்கு கூடுதல் பொறுப்பு கொடுத்து என்ன பயன் இருக்கப் போகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் சுப்ரீம் கோர்ட் கேள்விக்கு மேல் கேள்வி கேட்கின்றது. திமுக முழுவதும் ஜாமீன் வாங்கிய அமைச்சர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் தூக்கிவிட்டு இளைஞர்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும். ஜாமீன் வாங்கி இருக்கும் அமைச்சர்கள் அனைவரையும் நீக்கிவிட்டு கட்சி பணியை பார்க்க சொல்ல வேண்டும்
எம்ஜிஆரை கலைஞர் பேசாத முதலமைச்சர் என்று கூறினார். ஆனால் ஒரே இரவில் 10 அமைச்சர்களை மாற்றியவர் எம்ஜிஆர். தற்போது, அதிமுகவில் பிளவுகள் இல்லை. விஜய் ஒரு பிரபலமான நடிகர் மக்கள் செல்வாக்கு அதிகமாக இருக்கிறது. இளைஞர்கள் பட்டாளம் அதிகமாக இருக்கிறார்கள். அதனால் அவருக்கு பாதுகாப்பு வழங்கி இருக்கிறார்கள். அதிமுக ஆட்சி என்றால் பாதுகாப்பாக இருக்கலாம். திமுக ஆட்சி பெண்கள் முதல் மூதாட்டி வரை பாதுகாப்பு இல்லை என்பதால் அவருக்கு பாதுகாப்பு கொடுப்பது நல்லது.
அனைவருக்கு காதலர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்றும் நான் என் மனைவியை காதலிக்கிறேன். என் குழந்தைகள் மீது அன்பு செலுத்துகிறேன். என்னை போல் அனைவரும் அவர்களது மனைவியை காதலியுங்கள். அனைவருக்கும் அன்பு காதலர் தின வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் கூறினார்.