மயிலாடுதுறை அருகே கல்லூரி மாணவர் மற்றும் அவரது நண்பர் என இரண்டு பேரை சாராய வியாபாரிகள் கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ள சம்பவம் அப்பள்ளியில் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை அருகே பெரம்பூர் காவல் சரகத்துக்கு உட்பட்ட முட்டம் கிராமத்தில், ராஜ்குமார், தங்கதுரை, மூவேந்தன் ஆகியோர் தொடர்ந்து சாராயம் விற்பனை செய்து வந்துள்ளார்கள். அது குறித்து போலீஸுக்கு தகவல் தெரிவிப்பவர்களை அடிப்பதும், கொலைமிரட்டல் விடுப்பதுமாக இருந்து வந்துள்ளனர். இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சாராய வியாபாரி ராஜ்குமார் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் வெளிவந்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று இரவு, இவர்கள் சாராயம் விற்பதை தட்டிக்கேட்ட அப்பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனை சாராய வியாபாரிகள் அடித்ததாக கூறப்படுகிறது. இதனை முட்டம் வடக்குத்தெருவை சேர்ந்த கல்யாண்குமார் மகன் ஹரிஷ்(25), (பாலிடெக்னிக் படித்துவிட்டு வேலை தேடும் இளைஞர்), மற்றும் உறவினர் வீட்டிற்கு வந்திருந்த பேச்சாவடி பகுதியை சேர்ந்த பாலமுருகன் மகன் இன்ஜினியரிங் படிக்கும் மாணவன் ஹரிசக்தி (20) ஆகியோர் கண்டித்துள்ளனர். அதையடுத்து சாராய வியாபாரிகள் ராஜ்குமார் மூவேந்தன், தங்கதுரை ஆகியோர் இவர்களிடம் தகறாரில் ஈடுபட்டு சராமாரியாக கத்தியால் குத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த ஹரிஷ் மற்றும் ஹரிசக்தி ஆகிய இரண்டு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் சம்பவ இடத்தில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு உயிரிழந்த நபர்களின் உறவினரிடம் விசாரணை மேற்கொண்டார்.
இருவரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த இரட்டை படுகொலை குறித்து பெரம்பூர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய சாராய வியாபாரிகளை தேடி வருகின்றனர். சாராய வியாபாரிகளால் இரட்டை கொலை அரங்கேறிய நிலையில் அரசு மருத்துவமனையில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அதிகாலை ராஜ்குமார், தங்கதுரை, ஆகிய இருவரை கைது செய்துள்ள போலீஸார் மூவேந்தனை தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் இருவரை கைது செய்ய வேண்டும் என்று கூறி மயிலாடுதுறை அரசு மருத்துவமனை அருகே கும்பகோணம் செல்லும் பிரதான சாலையில் நள்ளிரவில் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடல்களை வாங்க உறவினர்கள் மறுத்ததால் காவல்துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.