“அமைதிப் பூங்காவாக விளங்கிக் கொண்டிருக்கிற தமிழகத்தில் மதரீதியாக மக்களை பிளவுபடுத்துகிற அரசியலை பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட சிலரும் மற்றும் இந்து முன்னணி அமைப்புகளும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அமைதிப் பூங்காவாக விளங்கிக் கொண்டிருக்கிற தமிழகத்தில் மதரீதியாக மக்களை பிளவுபடுத்துகிற அரசியலை பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட சிலரும் மற்றும் இந்து முன்னணி அமைப்புகளும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. சமீபத்தில் திருப்பரங்குன்றம் மலையில் நீண்ட நெடுங்காலமாக இந்துக்கள், இஸ்லாமியர்கள், ஜெயின் மதத்தவர்கள் உள்ளிட்ட அனைவரும் மதநல்லிணக்கத்தோடு, சகோதர, சகோதரிகளாக தங்கள் வழிபாட்டு முறைகளை அமைத்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
இந்தச் சூழலில் திருப்பரங்குன்றம் மலையில் நீண்டகாலமாக உள்ள தர்காவில் அசைவ உணவு சாப்பிட்டதாக பிரச்சினையை எழுப்பி, அதை அனுமதிக்கக் கூடாது என இந்து முன்னணி அமைப்பினர் போராட்டம் நடத்த முற்பட்டனர். அதற்கு மதுரை மாவட்ட காவல்துறை அனுமதி மறுத்து விட்டது. இதற்குப் பிறகு மதுரை உயர்நீதிமன்றத்தில் இந்து முன்னணியினர் தொடுத்த வழக்கில் பழங்காநத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி தரப்பட்டு பிப்ரவரி 4-ம் தேதி அந்நிகழ்வு நடைபெற்றது. அதில் சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பையும், விரோதத்தையும் வளர்க்கிற வகையில் முழக்கங்கள் எழுப்பப்பட்டதால் இந்து முன்னணியினர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், வேல் யாத்திரை நடத்த வேண்டுமென்று கோரி இந்து முன்னணியின் வேறொரு பிரிவினர் சென்னை காவல்துறையினரிடம் அனுமதி கேட்டனர். ஆனால், காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
அந்த வழக்கில் கடந்த வெள்ளிக்கிழமை வழங்கப்பட்ட தீர்ப்பில், இந்து முன்னணியில் ஒரு பிரிவினர் வேல் யாத்திரை நடத்த அனுமதி மறுக்கப்பட்டது தமிழகத்தில் மதநல்லிணக்கம் தழைத்தோங்குவதற்கு அனைத்து வகைகளிலும் முன்னோட்டமாக அமைந்துள்ளது.சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் திருப்பரங்குன்றம் மலையில் இந்துக்கள், முஸ்லிம்கள், ஜெயின் மதத்தினர் நீண்டகாலமாக அமைதியுடனும், நல்லிணக்கத்தோடும் தங்களது தனித்தனி வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழிபாட்டு முறைகளை பல தசாப்தங்களாக தங்களுக்குரிய இடங்களில் அமைதியாக முழு உரிமையுடன் செய்து வருகின்றனர். அதை சீர்குலைக்க யார் முயன்றாலும் தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது. அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தமிழக அரசுக்கு ஆணையிட்டுள்ளனர். இந்த தீர்ப்பை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக மதநல்லிணக்கத்தில் நம்பிக்கை இருக்கிற அடிப்படையில் வரவேற்க கடமைப்பட்டிருக்கிறறேன்.
மதுரையில் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் உள்ளடக்கிய அனைத்து கட்சியினர் கூட்டத்தை வருவாய் கோட்ட அதிகாரி கூட்டி, சமூக நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிக்கின்ற வகையில் திருப்பரங்குன்றம் மலையிலோ அல்லது வேறு பகுதிகளிலோ எந்தவிதமான நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதற்கு அனுமதிக்க முடியாது என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். அதேபோல, திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்று அழைப்பதா? கந்தர் மலை என்று அழைப்பதா? என்ற சர்ச்சையில் எவரும் ஈடுபடக் கூடாது. கடந்த காலங்களில் அந்த பகுதிகள் எப்படி அழைக்கப்பட்டதோ, அப்படியே தொடர்ந்து அழைக்கப்பட வேண்டும். அதை மாற்றுவதற்கு எவருக்கும் எந்த உரிமையும் கிடையாது என தெளிவாக உணர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட உடனேயே 1991-ம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டம் அன்றைய பிரதமர் பி.வி. நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி சர்ச்சைக்குரிய அயோத்தியை தவிர, நாட்டில் உள்ள மற்ற வழிபாட்டுத் தலங்கள் 1947 ஆகஸ்ட் 15 அன்று சுதந்திரம் அடைந்த போது எந்தெந்த வழிபாட்டுத் தலங்கள் எப்படி செயல்பட்டதோ, எத்தகைய வழிபாட்டு முறை பின்பற்றப்பட்டதோ அதை பாதிக்கிற வகையில் செய்வது சட்டவிரோதம் என்றும், அத்தகைய செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அச்சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் திருப்பரங்குன்றம் மலையை பொறுத்தவரை, சுதந்திரத்துக்கு முன்பே நீண்ட நெடுங்காலமாக எந்தெந்த வழிபாட்டு தலத்தை எந்தெந்த மதத்தினர், எத்தகைய உரிமையுடன் அனுபவித்து வந்தார்களோ, அதேநிலை தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பது தான் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பாகும். அந்த தீர்ப்பின் அடிப்படையில் திருப்பரங்குன்றம் மட்டுமல்லாமல், தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள வழிபாட்டு இடங்களில் மதநல்லிணக்கம் பாதுகாக்கப்பட சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசு மிகுந்த கண்காணிப்போடு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
திருப்பரங்குன்றம் பிரச்சினையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னெச்சரிக்கையுடன் சரியான நேரத்தில், நடவடிக்கை எடுத்த காரணத்தினாலும் மதநல்லிணக்கத்தை பாதுகாக்கின்ற வகையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிய ஆணை பெற்றதற்காகவும் அவரைப் பாராட்ட கடமைப்பட்டிருக்கிறென். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.