எதிர்கட்சியாக இருக்கும் போது GoBackModi, ஆளுங்கட்சியான பின் WelcomeModi-யா..? `வெள்ளை குடை வேந்தர் என பெயர் சூட்டினால் பொருத்தமாக இருக்கும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
வேலூர் கோட்டை மைதானத்தில் அ.தி.மு.க. இளைஞர்கள் – இளம்பெண்கள் பாசறை லட்சிய மாநாடு நேற்று (16-02-2025) மாலை நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசியதாவது:-
சென்னை கோட்டைக்கு செல்வதற்காகவே வேலூர் கோட்டையில் திரண்டுள்ளோம். கோட்டையில் இருப்பவர்களை வீட்டுக்கு அனுப்பும் கூட்டம்தான் இந்த மாநாடு. ஒரு கட்சி வலுவாக இருக்க இளைஞர்கள் அதிகமாக இருக்க வேண்டும். இளைஞர்களை அதிகம் கொண்டிருக்கும் கட்சி அ.தி.மு.க. அ.தி.மு.க. யாரை நம்பியும் இல்லை. மக்களை நம்பியே உள்ளது.
அ.தி.மு.க.வின் அறிக்கை பா.ஜ.க.வின் அறிக்கையை ஒட்டி இருக்கிறது என முதல்-அமைச்சர் ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என எந்த காலத்திலும் அ.தி.மு.க. யாரை நம்பியும் இல்லை, யாரை ஒட்டியும் அரசியல் செய்தது கிடையாது. இது மக்களை நம்பியிருக்கும் கட்சி. நாங்கள் யாரையும் நாடியது கிடையாது, எங்களை நாடிதான் அனைவரும் வருவார்கள்.
முதல்-அமைச்சர் ஸ்டாலின் வெளியே செல்லும்போது, இளைஞர்கள் தன்னை அப்பா என்று அழைப்பதாக சொல்லி உள்ளார். குழந்தைகளும், பெண்களும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும்போது ‘அப்பா.. அப்பா..’ என கதறுகிறார்களே அந்தச் சத்தம் உங்களுக்கு கேட்கவில்லையா என மக்கள் முதல்-அமைச்சரை கேட்கிறார்கள். தமிழகத்தில் 2025 ஜனவரி முதல் பிப்ரவரி 14 வரை சுமார் 107 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
எதிர்க்கட்சியாக இருந்தபோது ‘GoBackModi’ என கருப்பு பலூன் எல்லாம் இருந்தது. ஆளும் கட்சியானதும் ஊழல் குற்றச்சாட்டுகளால், ‘WelcomeModi’ என்று வெள்ளை குடை எல்லாம் வந்துவிட்டது. முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கு வெள்ளை குடை வேந்தர் என பெயர் சூட்டினால் பொருத்தமாக இருக்கும்.
தங்கள் கூட்டணியில் இருக்கும் அனைத்துக் கட்சியும் ஒரே கொள்கை கொண்ட கட்சி என்கிறார் ஸ்டாலின். பிறகு எதற்கு தனித்தனி கட்சி? அனைத்துக் கட்சியையும் ஒன்றிணைத்துவிடலாமே. அதே அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை கொள்கை வேறு, கூட்டணி வேறு. அதிகாரத்திற்காக கொள்கையை விட்டுக்கொடுக்கும் ஒரே கட்சி தி.மு.க. நீட் ரகசியம் தெரியும் என்று உதயநிதி ஸ்டாலின் சொன்னார். இதுவரை அவராலேயே அந்த ரகசியத்தை கண்டுபிடிக்க முடியவில்லை
வாக்குகள் சிதறாமல் இருக்க கூட்டணி அமைப்போம். அதன்படி, 2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைக்கப்படும். நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் எப்படியாவது கூட்டணி அமையுங்கள் என்கிறார்கள். உங்கள் கோரிக்கை ஏற்று வெற்றிக் கூட்டணி அமைப்போம்.
தி.மு.க.வுக்கு என்ன கொள்கை இருக்கிறது? 1999 பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து மத்திய ஆட்சியில் அங்கம் வகித்தது. அப்போது முரசொலி மாறன் நினைவிழந்திருந்த சமயத்தில் ஓராண்டு காலம் அவர் இலக்கா இல்லாத அமைச்சராக இருந்தார். அந்த ஐந்து ஆண்டு காலம் முடிந்ததும் அப்படியே அந்தர்பல்டி அடித்து காங்கிரசுடன் கூட்டணி. எனவே எங்களைப் பற்றி பேச ஸ்டாலினுக்கு அருகதை கிடையாது.
மத்திய அரசாங்கம் மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என கூறுவது சரியல்ல.. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இரு மொழி கொள்கைதான், இதில் மாற்றம் கிடையாது. தேசிய கல்விக் கொள்கையை கடைப்பிடித்தால்தான் நிதியை ஒதுக்குவோம் என்று சொல்வது சரியல்ல. மும்மொழிக் கொள்கையை ஏற்க நிர்பந்தப்படுத்துவதும் சரியல்ல. தமிழ்நாட்டில் இருக்கும் ஆட்சியாளர்களைப் பார்க்காதீர்கள்; மக்களைப் பார்த்து நிதி ஒதுக்குங்கள். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.