என்னை சிறையில் போட்டால்தான் சரியாக இருக்கும்: சீமான்!

என்னை சிறையில் போட்டால்தான் சரியாக இருக்கும். படிக்க நேரம் குறைவாக உள்ளது. சிறையில் போட்டால் நன்றாக படிக்க முடியும் என்று சீமான் கூறினார்.

சென்னை நீலாங்கரை இல்லத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-

எல்லா இடங்களிலும் வழக்கு போட்டு அலையவைத்து மனச் சோர்வை உண்டாக்க வேண்டும் என்று அரசு நினைக்கிறது. இதற்கு சோர்வடைகிற ஆளா என்று என்னை பார்க்கவேண்டும். நிறைய பார்த்தாச்சு இதற்கெல்லாம் அச்சப்படுபவர்கள் இந்த களத்திற்கே வரக்கூடாது. ஒரே காரணத்துக்காக போடப்பட்ட வழக்கு, ஒரே வழக்காக விசாரணை மேற்கொள்ளவேண்டும் என்று தெரிவித்து இருக்கிறோம். அதற்கு இடையில் இந்த அழைப்புகள் வந்துகொண்டிருக்கிறது. அதை வாங்கிக்கொள்ள வேண்டியதுதான். என்னால்தான் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதனால்தான் இப்படி செய்கிறார்கள். யாரைப் பார்த்து யார் பயப்படுகிறார்கள், என்னை பார்த்துதான் நீங்களும் பயப்படுகிறீர்கள்.

நீங்கள் எவ்வளவு நாளைக்கு பண்ணிட முடியும். நம்மதான் எல்லாம் என்று நினைத்துக் கொண்டுள்ளனர். அந்த திமிரு இருக்கிறது அல்லவா அந்த ஆட்டம் தான் அதை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் எதுவாக இருந்தாலும் எதிர்கொள்வேன். பெரியாரை இகழ்ந்து பேசி விட்டேன் என கூறுகிறார்கள். பெரியார் பேசியதை நான் கூறினேன். பெரியாரை கொண்டாட நினைப்பவர்கள் அவர்கள் புகழ்ந்து பேச வேண்டியதுதானே, பெரியார் பேசியதை தான் நான் பேசினேன். நான் தமிழ் இனத்தின் மகன், தாய் மொழி எனக்கு தமிழ், என் மொழி எனக்கு முகம், முகவரி, அடையாளம், எனக்கு உயிர், மற்றவர்களுக்கு மொழி, தொடர்பு கருவி, எங்களுக்கு உயிர். என் மொழி மனிதனால் உருவாக்கப்பட்டது அல்ல இயற்கையால் உருவாக்கப்பட்டது.

நாட்டின் பிரதமரே உலகம் முழுவதும் சென்று பேசி வருகிறார். உலக மொழிகளில் முதன் மொழி எங்கள் நாட்டில் இருப்பது பெருமை எனவும் இந்திய மொழிகளில் தொன்மை தமிழில் இருந்து அடையாளம் காணலாம் என பிரதமர் பேசிக் கொண்டே வருகிறார். நானும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறேன். காரில் பெட்டியோடுதான் சுற்றிக்கொண்டிருக்கிறேன். என்னை எப்படி பெரிய தலைவனாக்கி முதலமைச்சர் நாற்காலியில் உட்கார வைக்கிறது. என் ஒருவன் உழைப்பு பத்தாது, எல்லோரும் சேர்ந்து உழைத்துதான் என்னை தூக்கிக்கொண்டு உட்கார வைப்பார்கள். எங்கள் தலைவனை அடையாளம் காட்டியது தமிழ் மக்கள் இல்லை. என்னை சிறையில் போட்டால்தான் சரியாக இருக்கும். படிக்க நேரம் குறைவாக உள்ளது. சிறையில் போட்டால் நன்றாக படிக்க முடியும். இதற்கெல்லாம் பயப்பட்டால் இந்த இடத்திற்கு வர முடியுமா தம்பி. இவ்வாறு சீமான் கூறினார்.