திருநெல்வேலியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் விக்னேஷ், தேனி மாவட்டம் போடியில் கல்லூரி விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில் காவல்துறை விசாரணையில் கூறிய தகவல் அதிர்ச்சி அளிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் அருகே மேலசொக்கநாதபுரம் பகுதியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் திருநெல்வேலியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவன் கல்லூரி விடுதியில் தங்கி மூன்றாம் ஆண்டு பொறியியல் பட்டப்படிப்பு படித்து வந்தார். தேர்வு எழுதுவதற்காக கடந்த ஜனவரி மாதம் 19 ஆம் தேதி கல்லூரி விடுதியில் தங்கி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி கல்லூரியின் விடுதியில் விக்னேஷ் நீண்டநேரமாக காணவில்லை என்பதால் பூட்டி இருந்த கழிவறையை விடுதி காப்பாளர் உடைத்துப் பார்த்தபோது கழிவறையில் அதிக ரத்தம் வெளியேறிய நிலையில் மாணவன் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். பின்னர் இதுகுறித்து போடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மாணவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவரது உடலை பார்த்த பெற்றோர் மாணவரின் கழுத்து, காது ஆகிய பகுதிகளில் காயங்களும் மற்றும் ஆசனவாய் பகுதியில் ரத்த காயங்கள் இருந்ததால் சந்தேகம் அடைந்தனர். தங்களது மகன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக புகார் தெரிவித்தனர். ஆனால் அதற்கு, மாணவருக்கு வலிப்பு ஏற்பட்டு கழிவறையில் விழுந்து ரத்தப்போக்கு ஏற்பட்டதாகவும், மாணவரின் உடலை மீட்கும்போது உடலில் எறும்புகள் கடித்ததால் காயங்கள் உண்டாகியதாக போலீசார் தரப்பில் தங்களுக்கு தெரிவிக்கப்பட்டதாக இறந்த மாணவரின் தாயார் தமது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். போலீசாரின் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த பெற்றோர், உடலை பெற மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். எறும்பு கடித்து இவ்வளவு இரத்தம் சிந்தி, மர்மமாக உயிரிழந்த மாணவன் என இவர்கள் விசாரணை எல்லாம் சினிமாவில் வைத்தால் கூட யாரும் நம்ப முடியாத அளவில் தான் இருக்கிறது என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-
திருநெல்வேலியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவர், தேனி மாவட்டம் போடி கல்லூரி விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், இதுகுறித்து அவரது தாயார் காவல்துறையில் முறையிட்டு கழிவறையில் இருந்த அதிக அளவு இரத்தம் குறித்து கேட்க, “எறும்பு கடித்ததால் வந்திருக்கலாம்” என்று பொறுப்பற்ற முறையில் ஸ்டாலின் மாடல் திமுக அரசின் காவல்துறை தெரிவித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் காவல்துறை விசாரணை என்பதே விந்தையானதாக மாறிவிட்டது. சென்னை ஈசிஆர் வழக்கில் டோல் கேட்டில் விலக்கு பெற திமுக கொடி கட்டிய குற்றவாளி; இப்போது, எறும்பு கடித்து இவ்வளவு இரத்தம் சிந்தி, மர்மமாக உயிரிழந்த மாணவன் என இவர்கள் விசாரணை எல்லாம் சினிமாவில் வைத்தால் கூட யாரும் நம்ப முடியாத அளவில் தான் இருக்கிறது. பட்டியலினத்தைச் சேர்ந்த முதல் தலைமுறை பட்டதாரியான மாணவன் விக்னேஷின் மரணத்தின் உண்மையான காரணத்தை மறைத்து திசைதிருப்ப ஸ்டாலின் மாடல் திமுக அரசு முயற்சிக்குமாயின், அது கடும் கண்டனத்திற்குரியது. மாணவன் விக்னேஷின் மரணத்திற்கான காரணத்தை முறையாக விசாரணை செய்து கண்டறிந்து, அதில் யாருக்கேனும் தொடர்பிருப்பின், கடும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.