“பாஜக பேசுவதெல்லாம் தேச பக்தி. ஆனால், இந்திய தேசத்தை – இந்தியர்களை அவமதிக்கும் அமெரிக்காவிடம் அடங்கி போவது என்ன மாதிரியான தேசபக்தி?” எனக் கேள்வி எழுப்பி உள்ளார் விசிக துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு.
வன்னி அரசு சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-
இந்தியர்களை சட்ட விரோத குடியேறிகளாக அறிவித்து கை விலங்கிட்டு அவமானப்படுத்திய அமெரிக்கா மீதோ அதிபர் ட்ரம்ப் மீதோ பாஜகவினருக்கு எந்த கோபமும் வரவில்லை. மாறாக, அப்படி செய்த அதிபர் ட்ரம்ப் அவர்களை ஆரத்தழுவுகிறார் இந்திய ஒன்றியத்தின் தலைமை அமைச்சர் மோடி. ஒரு கண்டனம் கூட இல்லை. இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களோ, இன்னும் ஒரு படி மேலே போய், இதுவெல்லாம் சகஜம் தான் என நாடாளுமன்றத்திலேயே சப்பைக்கட்டு கட்டுகிறார். ஆனால் விகடன் போன்ற ஊடகங்களை அச்சுறுத்துகிறது பாஜக கும்பல். பாஜக பேசுவதெல்லாம் தேச பக்தி. ஆனால், இந்திய தேசத்தை – இந்தியர்களை அவமதிக்கும் அமெரிக்காவிடம் அடங்கி போவது என்ன மாதிரியான தேசபக்தி? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் அனுமதியின்றி குடியேறிய இந்தியர்கள் மனிதாபிமானமற்ற முறையில் கை, கால்களில் விலங்குகள் பூட்டப்பட்டு இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். அந்தவகையில், இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கத் தவறியதாக பாஜக அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டவர்களை “மனிதாபிமானமற்ற முறையில்” நடத்துவது தொடர்பான சர்ச்சைக்கு மத்தியில், இரண்டாவது பகுதியாக வந்திறங்கிய இந்தியர்கள் கை விலங்கிடப்பட்டு, விலங்குகளால் கட்டப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறியுள்ளனர்.
இதற்கிடையே பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு சென்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்துப் பேசினார். அப்போது, நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் கை, காலில் விலங்கு பூட்டப்பட்டது குறித்து எந்த எதிர்ப்பையும் பிரதமர் மோடி தெரிவிக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.