ஓய்வூதியத்தை வழங்குவதில் திமுக அரசு தாமதம் ஏற்படுத்தியுள்ளது: ஓ. பன்னீர்செல்வம்!

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு 15 ஆண்டுகளுக்கு பிறகு வழங்க வேண்டிய முழு ஓய்வூதியத்தையும், 80-வயது முடிந்த ஓய்வூதியதாரர்களுக்கு வழங்க வேண்டிய 20 விழுக்காடு கூடுதல் ஓய்வூதியத்தையும் வழங்குவதில் திமுக அரசு தாமதம் ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

திமுக தனது தேர்தல் அறிக்கை எண் 308-ல், “மாநில அரசு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 80-வயது நிறைந்தவுடன் 20 சதவிகிதம் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. இதனை மாற்றி 70-வயது நிறையும் பொழுது 10 சதவிகிதமும், 80-வயது நிறையும் பொழுது மேலும் 10 சதவிகிதமும் ஓய்வூதியம் வழங்கப்படும்” என்று குறிப்பிட்டு இருக்கிறது. திமுக அரசால் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளில் இதுவும் ஒன்று என்பது வேறு விஷயம். ஆனால், 80-வயது நிறைவற்ற ஓய்வூதியதாரர்களுக்கே 20 விழுக்காடு உயர்த்தி வழங்குவதில் மாதக் கணக்கில் தாமதம் ஏற்படும் அவல நிலை நிலவுகிறது.

இதனையும், திமுகவின் தேர்தல் வாக்குறுதியையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது “கூரை ஏறி கோழி பிடிக்கத் தெரியாதவன் வானத்தில் ஏறி வைகுண்டம் காட்டுவேன்” என்ற பழமொழிதான் நினைவிற்கு வருகிறது. தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும்போது, அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட முழு ஓய்வூதியத் தொகையில் 33 விழுக்காட்டிற்கு மிகாமல் அரசுக்கு ஒப்படைப்பு செய்து அதற்கான மொத்தத் தொகையினை (Commutation of Pension) பெற்றுக் கொள்வது வழக்கம்.

இதற்குப் பதிலாக, முழு ஒய்வூதியத் தொகையில் 33 விழுக்காடு குறைக்கப்படும். இதனை குறை ஓய்வூதியம் (Reduced Pension) என்று கூறுவர். இந்த குறை ஓய்வூதியம் 15 ஆண்டுகள் வழங்கப்படும். 15 ஆண்டுகளுக்குப் பிறகு முழு ஓய்வூதியம் வழங்கப்படும். இதேபோன்று, 80வயது நிறைந்த ஓய்வூதியதாரர்களுக்கு 20 விழுக்காடு ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும். இதற்குப் பிறகு ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை கூடுதல் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இதுதான் நடைமுறை. மேற்படி நடைமுறையை உடனுக்குடன் அமல்படுத்துவதில் நீண்ட காலதாமதம் ஏற்படுவதாகவும், வயதான காலத்தில் தாங்கள் அலைக்கழிக்கப்படுவதாகவும், இது குறித்த புகார்கள் புறக்கணிக்கப்படுவதாகவும், இதன் காரணமாக மிகுந்த மன உளைச்சலுக்கு தாங்கள் ஆளாகியுள்ளதாகவும், சுகாதார காப்பீட்டு அட்டை பெரும்பாலானோருக்கு வழங்கப்படவில்லை என்றும் ஓய்வூதியதாரர்கள் தெரிவிக்கிறார்கள்.

இதற்கு அரசின் நிர்வாகத் திறமையின்மை காரணமா அல்லது நிதிப் பற்றாக்குறை காரணமா என்று தெரியவில்லை. தற்போதுள்ள கணினிக் காலத்தில் இதைக்கூட செய்ய இயலாதது வேதனைக்குரியது. எப்படி இருந்தாலும், இது திமுவின் செய்திறனின்மை. எது எப்படியோ, வயதான காலத்தில் ஓய்வூதியதாரர்களை துன்புறுத்துவது கடும் கண்டனத்திற்குரியது. இதற்கு உடனடி தீர்வு காண வேண்டிய பொறுப்பும், கடமையும் திமுக அரசிற்கு உண்டு.

முதல்வர் ஸ்டாலின் இதில் தனிக் கவனம் செலுத்தி 15 ஆண்டுகள் முடிந்த அடுத்த மாதத்திலிருந்து ஓய்வூதியதாரர்களின் வங்கிக் கணக்கில் முழு ஓய்வூதியம் தானாக சென்றடையும் வகையிலும், 80 வயது நிறைந்தவர்களுக்கு 20 விழுக்காடு ஓய்வூதியம் தானாக சென்றடையும் வண்ணமும், அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கு காப்பீட்டு அட்டை கிடைக்கும் வகையிலும் உடனடி நடவடிக்கையினை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.