“இந்தியை ஏற்றுக்கொள்ள முடியாது என்றால் கல்விக்கான நிதியை கொடுக்க மாட்டோம் என்று ஒன்றிய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறி இருப்பது இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாகும். அமைச்சரின் இந்த அதிகாரச் செருக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்” என அக்கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
இந்திய அரசமைப்புச் சட்டத்தையும், அதன் அடிப்படைக் கூறுகளுள் ஒன்றான கூட்டாட்சி முறையையும் அவமதித்துப் பேசியுள்ள அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
‘சமாக்ரா சிக்ஷா’ திட்டத்திற்காக தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒன்றிய பாஜக அரசு விடுவிக்காமல் இழுத்தடித்து வருகிறது. அந்த நிதியை விடுவிக்க வேண்டும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் சென்று வலியுறுத்தினோம். அப்போது ‘பிஎம்ஸ்ரீ’ திட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் தந்தால் மட்டுமே இந்த நிதியை விடுவிப்போமென கூறினார். அதற்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், ‘தேசியக் கல்விக் கொள்கையில் பள்ளிக் குழந்தைகள் இந்தியைக் கட்டாயமாக படிக்க வேண்டுமென உள்ளது; நாங்களோ இருமொழிக் கொள்கையைத்தான் கடந்த 75 ஆண்டுகளாகப் பின்பற்றி வருகிறோம். இந்நிலையில் ‘பிஎம்ஸ்ரீ’ திட்டத்தை எவ்வாறு நடத்த முடியுமென்று கேட்டார். தமிழ்நாடு அரசு கேட்பது ‘சமாக்ரா சிக்ஷா’ திட்டத்துக்குத் தானே தவிர, ‘பிஎம்ஸ்ரீ’ திட்டத்துக்கு அல்ல என்றும் அமைச்சர் விளக்கம் கொடுத்தார். பிஎம்ஸ்ரீ திட்டத்தை ஏற்காததற்காக சமாக்ரா சிக்ஷா திட்டத்துக்கான நிதியை விடுவிக்க மறுப்பது சரியல்ல என்பதை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சுட்டிக் காட்டினோம். அதற்குப் பிறகும் அந்தத் தொகை விடுவிக்கப்படவில்லை.
அதுபற்றி ஊடகத்தினர் கேள்வி எழுப்பியபோதுதான், “மும்மொழித் திட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் நிதி வழங்க முடியாது” என்று தர்மேந்திர பிரதான் கூறியிருக்கிறார். ‘சமாக்ரா சிக்ஷா’ என்பது பள்ளிக் கல்வி தொடர்பாக ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்தும் ஒரு திட்டத்தின் பெயராகும். 2018-19ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்துக்கும் தேசிய கல்விக் கொள்கைக்கும் தொடர்பில்லை. இது புதிய திட்டம் அல்ல. ஏற்கனவே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நடைமுறையில் இருந்த அனைவருக்கும் கல்வித் திட்டம் (SSA) இடைநிலைக் கல்வித் திட்டம் (RMSA) ஆசிரியர் பயிற்சி (TE) ஆகியவற்றை ஒருங்கிணைத்து சூட்டப்பட்ட பெயர்தான் சமாக்ரா சிக்ஷா என்பதாகும்.
“பள்ளிகளின் செயல்திறனை மேம்படுத்துவது; அனைவருக்கும் பள்ளிக் கல்விக்கு சம வாய்ப்புகள் வழங்குவது; சமமான கற்றல் முடிவுகளை உறுதி செய்வது” ஆகியவையே இதன் நோக்கம் என ஒன்றிய அரசு கூறுகிறது. சமாக்ரா சிக்ஷா திட்டத்துக்கு 2024-25 பட்ஜெட்டில் 37,010 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் 41,250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பிஎம்ஸ்ரீ என்று பெயர் வைக்கப்பட்டுள்ள திட்டம் சமாக்ரா சிக்ஷாவிலிருந்து வேறுபட்டதாகும். தற்போது இருக்கும் பள்ளிகளில் சிலவற்றை சிறப்புப் பள்ளிகளாக உருவாக்குவதே இதன் நோக்கம். இந்தியா முழுவதும் 14,500 பள்ளிகள் அப்படி உருவாக்கப்படும் என ஒன்றிய அரசு கூறுகிறது. ஏற்கெனவே இருக்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், நவோதயா பள்ளிகளையே பிஎம்ஸ்ரீ பள்ளிகள் என ஒன்றிய அரசு பெயர் மாற்றி அறிவித்துள்ளது. பிஎம்ஸ்ரீ பள்ளிகளுக்கு கடந்த 2024-25 பட்ஜெட்டில் 6,050 கோடி ஒதுக்கப்பட்டது. அது திருத்தப்பட்ட பட்ஜெட்டில் 4,500 கோடியாக குறைக்கப்பட்டது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் 7,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
நவோதயா பள்ளிகளைத் தமிழ்நாடு அரசு துவக்கவில்லை. எனவே அதற்கான நிதி தமிழ்நாட்டுக்குக் கொடுக்கப்படுவதில்லை. அதுபோலத்தான் பிஎம்ஸ்ரீ என்பது இந்தி கட்டாயமாகக் கற்பிக்கப்படும் பள்ளிகளைத் திறப்பதாகும். அதைத் தமிழ்நாடு அரசு ஏற்கவில்லை. அதற்கான நிதி தமிழ்நாட்டுக்குத் தேவையில்லை. ஆனால், ஏற்கனவே இங்கு செயல்படுத்தப்படுகிற சமாக்ரா சிக்ஷா திட்டத்துக்கான நிதியைக் கொடுக்க மறுப்பது சட்டத்துக்குப் புறம்பான அடாவடித்தனமாகும்.
அடாவடித்தனமும் ஆணவமும் அனைவருக்குமான ஒரு பொறுப்புள்ள அமைச்சருக்கு இருக்கக் கூடாது. கல்வி குறித்த அக்கறை துளியும் இல்லாதவர் தர்மேந்திர பிரதான் என்பதை அவரது நடவடிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன. ஒடிசாவைச் சேர்ந்த அவர், அம்மாநிலம் இந்தியை ஏற்றுக்கொண்டதால் தொன்மை வாய்ந்த தனது ஒரிய மொழி எப்படி அழிந்து வருகிறது என்பதை ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்க வேண்டும். எடுத்தேன் கவிழ்த்தேன் எனப் பேசி தமிழ்நாட்டு மக்களின் பொறுமையை சோதிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
தாய்மொழியை காக்க தங்கள் உயிர்களை ஈகம் செய்த மொழிப்போர் ஈகியரைப் பெற்ற மாநிலம் தமிழ்நாடு. அந்த வரலாறு தெரியாவிட்டால் மற்றவர்களிடம் அவர் கேட்டுத் தெரிந்துகொள்ளட்டும். தமிழ்நாட்டு மக்கள் வெகுண்டெழுவதற்கு முன் தமிழ்நாட்டுக்கு உரிய நிதியை விடுவிக்க வேண்டும் என இந்திய ஒன்றிய அரசை வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.