புதிய கல்விக் கொள்கையை ஏற்பதாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதவில்லை: அன்பில் மகேஷ்!

புதிய கல்விக் கொள்கையை ஏற்பதாக தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதவில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

புதிய கல்விக் கொள்கையை கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தின. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு பேசினார். அதில் அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டை ஏமாற்றும் வேலையை பாஜக அரசு செய்து வருகிறது. நாம் தரும் ஒரு ரூபாய் வரி வருவாயில் 29 பைசா கூட நமக்கு வருகிறதா. இது என்ன உங்கள் அப்பன் வீட்டு பணமா என்று கேட்டால் பொத்துக் கொண்டு வருகிறது. 43 லட்சம் பிள்ளைகள் எதிர்காலம் உள்ளது. அவர்கள் வயிற்றில் ஒன்றிய அரசு அடிக்க வேண்டாம்.

மும்மொழிக் கொள்கையை ஒத்துக் கொண்டதாக தமிழ்நாடு அரசு கூறவில்லை. மாநில கமிட்டி பரிந்துரையின் அடிப்படையிலேயே கையெழுத்து போடுவோம் என்று தமிழக அரசு மத்திய அரசிடம் பதில் அளித்து உள்ளது. இதை ஊடகத்துறையினர் திரித்து எழுதுகின்றனர். தேசியக் கல்விக் கொள்கையை ஒப்புக் கொள்ள சொல்லி தர்மேந்திர பிரதான் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அனுப்பினார். அதில் தேசியக் கல்விக் கொள்கையை எடுத்துவிட்டு முதலமைச்சர் மத்திய அரசுக்கு வேறு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அனுப்பினார். இதற்காக கடிதம் எழுதிய தர்மேந்திர பிரதான் ‘மத்திய அரசு அனுப்பிய புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பதிலாக வேறு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தருகிறீர்களே’ என்றார்.

இதற்கு பெயர்தான் ஒத்திசைவு பட்டியல். கல்வி விவகாரத்தில் மத்திய அரசும், மாநில அரசும் அமர்ந்து பேசிய பிறகு முடிவெடுக்க வேண்டிய விஷயம் இது. கண்கரண்ட் லிஸ்ட் என்றால் என்ன வென்று தெரியவில்லை. ஆனால் எல்லாவற்றையும் மூடி மறைக்கும் சீக்ரெட் லிஸ்டாக பாஜக அரசு உள்ளது. இந்தியாவில் யாரை எங்கு வேண்டுமானலும் ஏமாற்றலாம். ஆனால் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினை ஏமாற்ற ஒருவர் பிறந்துதான் வர வேண்டும்.

இரண்டு முறை தேடி வந்து தர்மேந்திர பிரதான் அவர்களை சந்தித்தேன். மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் என்ன?; ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினீர்கள். எங்கள் மாநில உணர்வு பற்றி எங்களுக்குத் தெரியும். ஒரு மொழிக்காக உயிர் நீத்த ஒரே மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்று அவரிடம் சொன்னேன். பிஎம் ஸ்ரீ பள்ளி, தேசியக் கல்விக் கொள்கை, இந்தி திணிப்பை நாங்கள் எதிர்க்கிறோம். 2,150 கோடி ரூபாய் என்பது 43 லட்சம் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக கேட்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.